கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.
ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர். வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.இவரது ஜீவ சமாதி எங்கு இருக்கிறது எனத்தெரியவில்லை; திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார்.இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை. ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார். சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது. ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார். ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு. இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார். சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி ,மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும்.அன்னதுவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும். திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார்.இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார். ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும். மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும். இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர். திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!
கமலமுனி சித்தரின் ஜீவசமாதி மதுரையில் இருக்கிறது.
திருமூலரின் ஜீவசமாதி திருநெல்வேலி நெல்லையப்பர்கோவிலில் ஸ்ரீமூலர் சன்னதியாக இருக்கிறது. ஸ்ரீபல்குன ருத்ரசித்தர் அவர்கள் தென்னிந்தியாவின் கயா எனப் போற்றப்படும் பூவாளூரில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார்.இந்த ஊர் திருச்சியை அடுத்த லால்குடியின் அருகில் உள்ளது.இந்த பூவாளூரில் பல்குனி நதி இருக்கின்றது. இங்கு இன்றும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.கடும்பாவம் செய்தால் அல்லது நமது தாத்தா காலத்தில் செய்திருந்தால் அதைத் தீர்க்கும் வரை ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் கஷ்டப்படவேண்டியதுதான்.அப்படி கஷ்டப்படாமலிருக்க பரிகாரம் அவசியமாகிறது.அந்த பரிகாரங்களுக்கு சாட்சி பூதமாக நின்று பித்ரு சாபங்களிலிருந்து நம்மை இன்றும் நம்மைக் காப்பாற்றுபவர்தான் பல்குனி ருத்ர சித்த மாமுனி!!! இவருடைய யோக ஜோதி எப்போதும் இத்திருத்தலத்தில் இருந்துகொண்டு சாயா யோக ககன மார்க்கமாக இன்றும் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். மூப்பு,பிணி,பசி,உறக்கமில்லா தேவநிலை மற்றும் பித்ருக்களின் உத்தம நிலைகளைத் தரவல்லதே பூவாளூர் தலபித்ருபூஜைகளின் பலன்களாகும். பொன்முத்திரையர் என்ற சொர்ண பைரவர் சித்தர் அண்ணாமலையில் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார். சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தரின் ஜீவ சமாதி வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது கஸ்பா ஏ என்ற பகுதி. அப்பகுதியில் உள்ள சோமலாபுரம் சாலையில்தான் உள்ளது. பசுமடத்துக்கோனார் சித்தர் அவர்கள் ஸ்தூல சூட்சும காரண காரிய வடிவங்களில் இவர் மகாசிவராத்திரி அன்று கிரிவலம் வருகிறார்.இருப்பது அங்கே தான்.இவர் அடி அண்ணாமலைக்கு அருகில் உள்ள கோசலைப்பகுதியில் வாழ்கிறார்.இங்கு வந்ததும் இக்கிராமத்து மண்ணை எடுத்து நெற்றியில் திருநீற்றுத் திலகமாக இட்டுக்கொள்கின்றனர். மகாசிவராத்திரி அன்று கிரிவலம் செல்லும்போது பசுவின் திருவடி பட்ட மண்ணை சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து திருநீறாக இட்டு பசு கன்றுடன் கிரிவலம் வருவது சிறப்பாகும்.இப்படிச்செய்தால், சந்தேகம் கொண்டு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.சொத்து, பதவி இழந்தோர் திரும்பபெறுவர்.தொழில், பதவி காரணமாகப் பிரிந்த பெற்றோர்கள்,பிள்ளைகள் மீண்டும் இல்லத்தில் இணைவர்.அடிக்கடி வயிற்றுவலி உடையவர்கள் அவதி நீங்கப்பெறுவர்.சந்ததி விருத்தி உண்டாகும். புலத்தியரின் ஜீவசமாதி ஆவுடையார்கோவிலிலும், பொதிகைமலையிலும் இருக்கிறது. ஸ்ரீபோடோ சித்தர் முனிகளின் ஜீவசமாதி சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்திரீஸ்வரர் சிவாலயமாகும்.அதிகம் பிரபலமடையாத யோக சக்திகள் நிறைந்த ஸ்தலம் இது.இன்றைய கணிப்பொறித் தொழில் சுனாமிவளர்ச்சியடைவதற்கு இவரே காரணம்(ஆதாரம்::சிவமயம் கண்ட சித்தர்கள் புத்தகம் பக்கம் 216).இவரை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட சனித் தொந்தரவும் நம்மை அண்டாது. திருக்கோயிலூர் ஜடாமுனித் தம்பிரான் சித்தர் மிகவும் பாசம் மிக்கவர்.திருஅண்ணாமலையில் வாழ்ந்துவருகிறார்.மாத சிவராத்திரி திருநாளில் ஜடாமுனி சித்தர் அருளிய ஸ்ரீகாயத்ரி கோபுரதரிசன முத்திரை இட்டவாறு கிரிவலம் வருவோர்க்கு எத்தகைய நோய்களுக்கும் தீர்வு பெறுவதற்கான வழிகள் கிட்டும். வேப்பிலைக்கட்டிச்சித்தர் அண்ணாமலையில் இருக்கிறார். கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தரும் அண்ணாமலையில் வாழ்கிறார். பட்டினத்தார் திருவெற்றியூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார். சப்தகந்தலிங்க சித்தரும் அண்ணாமலையில்தான் வாழ்கிறார். இவர் ஆனி மாத சிவராத்திரியன்று கிரிவலம் வருகிறார்.அப்படி கிரிவலம் வருவோர்,பின்வரும் மந்திரம் ஜபித்தால் கடன் குறையும்.மனக்கவலை அகலும்.தீராத பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு கிட்டும். ஓம் சப்தநாதாய வித்மஹே சப்தவேதாய தீமஹி தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத் கடுவெளிசித்தரின் ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் உள்ளது. சாங்கத்தேவர் சித்தர் கோதாவரி நதிக்கரையில் ஜீவசமாதியாகியுள்ளார். ஸ்ரீசந்தனு பீவி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர் அண்ணாமலையில் வாழ்கிறார்.
சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-2
காகபுஜண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி ஆனதாகவும் கூறப்படுகிறது. ரோம முனி கும்பகோணத்தை அடுத்த கூத்தனூரில் சமாதியானதாகக் கூறுகிறார்கள். காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.(ஒரு சித்தர் ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் ஜீவசமாதியடையமுடியும் என்பதை ஜனவரி 2009 வலைப்பூவிலேயே கூறியுள்ளோம்) தமிழ்நாட்டில் உள்ள திருவீழிமழலையில் ஒரு வில்வமரத் தூண் இருக்கிறது.இங்கு காலாங்கிநாதர் ஜோதி ரூபமாக உறைகிறார். கொங்கணர் திருப்பதி பாலாஜிசுவாமி மூலஸ்தானத்தின் நேர் கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார். சட்டைமுனி சீர்காழியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவருக்கு அங்குள்ள கோவிலில் சட்டைநாதர் என்று பெயர். வாழ்க்கையில் எந்த பிடிப்புமின்றி வாழ்ந்து வருபவர்கள் சட்டைமுனிக்கு தினந்தோறும் சித்தயோகம் மற்றும் அமிர்தயோகம் நேரங்களில் அர்க்கியம் அளிப்பது நன்று.திருவாதிரை,திருவோணம்,புனர்பூசம்,புதன்கிழமை,அமாவாசை,வாஸ்துநாள் போன்ற நாட்களில் குறிப்பாக தமிழ்வருடப்பிறப்பன்று ‘ஸ்ரீசட்டை நாத சித்தமா முனி தர்ப்பயாமி’ என்று 18 முறை சொல்லி கீழ்நோக்கிய் அசின்முத்திரைவடிவில் வலதுகையை தாழ்த்திவைத்து கைகளில் நீரைவார்த்து அர்க்கியம் அளிப்பது நன்று.(இதனால் தீராத பிரச்னைகள் தீரும்) யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார். கோரக்கர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற இடத்திலும், தமிழ்நாட்டில் பேரூரிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார். மச்ச முனி திருப்பரங்குன்றத்திலும் திருவானைக்கா(திருச்சி)விலும் சித்தியடைந்திருக்கிறார். கருவூரார் கருவூரில் இறைவனிடம் கலந்துவிட்டார்.அங்கு இவருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது. பிண்ணாக்கீசர் கேரளாவில் உள்ள நாங்கணாச்சேரியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இங்கு இச்சமாதியில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுவருகிறது. அகப்பேய் சித்தர் திருவையாறு என்ற இடத்தில் ஜீவசமாதியாகியிருக்கிறார். தேரையர் மலையாளநாட்டில் உள்ள தோரண மலையில் தவம் செய்து அங்கேயே ஜீவசமாதியடைந்தார். பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை,விருத்தாசலம்(பழமலை) யில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.மருதமலையில் பாம்பாட்டிசித்தர் குகை,பாம்பாட்டி சுனை இருக்கிறது. குதம்பைசித்தர் மயிலாடுதுறையில் ஜீவசமாதியடைந்தார். புலிப்பாணி பழனிமலையில் இருக்கிறார். அழுகணிசித்தரின் ஜீவசமாதி நாகப்பட்டிணத்தில் உள்ள சிவாலயத்தினுள் இருக்கிறது.
சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்-1
அகத்தியர் திருவனந்தபுரத்தில்( அனந்த சயனம் ) சமாதியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு சிலர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதியடைந்திருப்பதாகக் கூறுகின்றனர். சித்தர்களின் தலைவரான அகத்தியருக்கு கும்பமுனி என்ற பெயரும் உண்டு.எனவே இவரது ராசி கும்பராசியாக இருக்கலாம்.கும்பராசிக்காரர்களுக்கு இவரது அருளாசி வெகுவிரைவில் கிடைக்கும் எனக்கூறலாம்.கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் இவரது தரிசனம் விரைவில் கிடைக்கலாம். இந்த வலைப்பூவில் போன வருடத்தில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்பதை விளக்கியுள்ளோம்.அதன்படி பயிற்சி செய்பவர்கள் 45 நாளிலேயே எந்த சித்தரையும் நேரில் தரிசித்து, பேசி அவரின் நேரடி சீடராகக்கூட மாறலாம்.முயற்சி செய்யுங்கள்.நிம்மதியாக வாழ்க வளமுடன்!!! போகர் பழனி மலைமீது வாழ்ந்துவருகிறார்.பழனி மலைமீது இவரது ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு தினமும் (பழனிக்காரர்கள்) சில நிமிடங்கள் இவரை நினைத்து நம் கஷ்டங்களை மனதால் கூறினாலே நம் வாழ்க்கை சுபிட்சமாகும். காக புஜண்டரின் ஜீவசமாதி திருச்சி உறையூரில் உள்ளது. ஸ்ரீவல்லபசித்தர் என்ற சுந்தரானந்தர் சித்தரின் ஜீவ சமாதி ,மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சித்தர் சன்னதி என்று பிரசித்திபெற்ற சக்திவாய்ந்த திருச்சன்னதியில் இருக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும்,திருவாதிரை,உத்திரம்,சதயம் நட்சத்திர நாட்களில்(உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகி எந்த நாள் எனக்கேட்கவும்)இச்சித்தர் பெருமான் சன்னதியில் குங்குமப்பூ,முந்திரி,பாதாம்கலந்த பாலால் அபிஷேகம் செய்து இம்மூலிகைக்கலவை நிறைந்த பாலை ஏழைக்குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் யோகாசனம்,ஜோதிடம் முதலான நுண்கலைகள் கைகூடும்.அந்தத்துறைகளில் வளரலாம். தவிர விபத்து,நீரில் மூழ்குதல்,போர்,வெள்ளம்,துர்மரணமடைந்து உரிய உடல் கிடைக்காமை போன்றவைகளால் ஏற்படும் வேதனை தீர இச்சித்தரை வழிபட்டுவர பெரும் நன்மை உண்டாகும்.
சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.சித்தர்களுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது.ஆனாலும் கலியுகத்தில் அவர்கள் சூட்சுமமாக வந்து நம்மைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.யார் தொடர்ந்து அதாவது தினமும் சித்தர்களில் எவரையாவது ஒருத்தரை வழிபட்டுக்கொண்டு வருகிறாரோ அவரை ஆபத்துக்காலத்தில் அந்த சித்தர் காப்பாற்றிவருவது அனுபவ உண்மை. எவருக்கு ஜன்மச்சனி, அஷ்டமச்சனி, ஜன்ம ராகு அல்லது ஜன்ம கேது நடக்கிறதோ அவரே வாழ்க்கையில் மிகப்பெரும் அவமானம் அல்லது ஏமாற்றத்தை சந்திக்கிறார்.அவரைத்தவிர மற்ற அனைவருமே ஆன்மீகம்,ஜோதிடம்,பரிகாரம் பற்றி இழிவாகவே நினைக்கிறார்கள். உதாரணமாக செப்டம்பர் 2009 முதல் 30 மாதங்கள்(இரண்டரை வருடங்களுக்கு)சனிபகவான் கன்னி ராசியில் இருக்கப்போகிறார்.இதனால்,கன்னி ராசிக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் ஏற்படுகிறது.இந்த ராசியினருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.நாம் எல்லாம் ஏன் உயிர்வாழ வேண்டும் என்ற அளவுக்கு மனவுறுதி குலையும். அதே சமயம் விருச்சிகம்,மேஷம்,மகரம்,கடகம் ராசியினருக்கு அசுர வளர்ச்சி உண்டாகும். கஷ்டப்படுபவர்கள் சித்தரை வழிபட்டால் பெரும் துன்பத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. நல்ல நிலையிலிருப்பவர்கள் சித்தரை வழிபட்டால் அவர்களின் வளர்ச்சி வேகம் இருமடங்காகும். என்னைப் பொருத்தவரையில் கடன்,நோய்,எதிரி,முன்வினை இல்லாமல் ஒருவன் அல்லது ஒருத்தி வாழ்ந்தாலே அவரே கோடீஸ்வரர்.அப்படி வாழ்வதை அவரவர் பிறந்த ஜாதகம் மூலமாக வே உறுதி செய்ய முடியும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகள் தமிழ்நாடு முழுக்க உள்ளன.உங்களது ஊருக்கு அருகில் அல்லது ஊரில் உள்ள சித்தரை வழிபடுங்கள்.சந்தோஷமாக வாழுங்கள் |
வெள்ளி, 28 மார்ச், 2014
சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக