வெள்ளி, 29 மே, 2015

திருக்கோயில் தலவரலாறு :படைவீடு அம்மன் சிறப்புகள்


வந்தே ஸ்ரீ ரேணுகாந்தேவீம் குண்டலீபுர வாஹிநீம் 

பக்தேஷ்ட்ட கல்பலதிகாம் ஸ்ரீ சங்கராச்சார்யா பூஜிதாம்

திருக்கோயில் அமைவிடம்

சீரும் சிறப்பும் பொருந்துய தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் பலவற்றுள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அம்மன் கோயில் படைவீட்டில் அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் சக்தி தலங்களில் ஒன்றாகும். தனிச் திறப்பு வாய்ந்த சக்தி பீடங்கள் அறுபத்தி நான்கினுள் ஒன்றெனவும் பகரப்படுகிறது. இத்திருக்கோயில் அமைத்துள்ள படைவீடு எனும் இக்கிராமம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் (ஜவ்வாது மலைத்தொடர்) அடிவாரத்தில் சுற்றிலும் மலைகளும், பசுமையான வனங்களும் அரணாக அமைந்து மலைகளின் நடுவில் அமைந்து அழகு சேர்க்கின்றன. இவ்வூர் வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 32வது கி.மீட்டரில் சந்தவாசல் எனும் ஊரின் சாலை சந்திப்பிலிருந்து 6 கி.மீட்டரில் மேற்கில் உள்ளது. ஆரணியிருந்து 20 கி.மீட்டரிலும், திருவன்னமலையிருந்து 55 கி.மீட்டரிலும் உள்ளது.

அம்மன் கோயிலின் அமைவிடம் கீழே உள்ள நிலப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. 

சரித்திர சிறப்பு:
சம்புவராய அரசர்கள் காலத்தில் படைவீட்டினை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களது காலத்தில் இவ்வூரில் அருள்மிகு இராமச்சந்திர சுவாமி, வரதராஜ பெருமாள், இலட்சுமி நரசிம்ம சுவாமி, கோட்டை மலை வேணுகோபால சுவாமி ஆகிய திருக்கோயில்கள் நிர்மாணிக்கபட்டும், சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இரு கோட்டைகளும் அகழிகளும் கட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் கோட்டைகளும், அகழிகளும், சில கோயில்களும் அழிந்துவிட்டன. விஜய நகர நாயக்க மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளதால் அவர்களது தொடர்பும் அறியப்படுகின்றது. மிக அமைதியான இக்கிராமம் கட்டடக்கலை மற்றும் திருவுருவச் சிற்கங்கள் நிறைந்து மிகச் சிறப்பாக காணப்படுவதும், பலப்பல தெய்வங்களின் உறைவிடமாகவும் இருப்பது பெரும் வியப்பை தருகிறது. கலைகள் மற்றும் மதத்தின் பேரில் சம்புவராய மன்னர்கள் கொண்டிருந்த பற்றினை படைவீட்டில் உள்ள தொல்பொருளியல் சிதைவுகள் பறைசாற்றுகின்றன.

தளச் சிறப்பு:
தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும். அம்மன் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருக்கொண்டு உலகில் சக்தியே எல்லாமென எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகிறாள். ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும் இத்திருத்தலதில்தான். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைத்துள்ளது சிறப்பாகும். ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு இராமச்சந்திர சுவாமி திருக்கோயில் தவிர இதர திருக்கோயில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வூர் அரசர்கள் காலத்தில் பட்டிணமாக இருந்ததாகவும், காலப்போக்கில் இயற்கை சீற்றங்களினால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.

திருநீற்றின் சிறப்பு:
ஜமதக்கினி முனிவர் யாகம் செய்த இடத்திலிருந்து பிரதி வருடமும் ஆனி திருமஞ்சனத்தன்று வெட்டி எடுத்து வரப்படும் திருநீறுதான் இங்கு சன்னதியில் வழங்கப்படுகிறது. இதனை அணிய பிணிகள் அகலும்.

கோயில் அமைப்பு:
இத்திருக்கோயில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைத்துள்ளது. அருள்மிகு விநாயகர், அருள்மிகு ஆறுமுகர் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர். திருச்சுற்றில் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கருக்கில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். திருக்குளம் உட்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது.

கோயில் கருவறையின் சிறப்பு:
இத்திருகோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடனும் எழுந்தருளியுள்ளார்கள். மேலும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், அத்திமரத்தினாலான அம்மன் முழு திருஉருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகதேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிப்பட்ட பலன் உண்டு.

படைவீடு பெயர் காரணம்:
படை + வீடு = படைவீடு. படைகள் தங்கு இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள்பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என் பெயர் மருவி வந்துள்ளது. அம்மன் கோயில் அமைத்துள்ள இடம் அம்மன் கோயில் படைவீடு (அ.கோ.படைவீடு) என தற்போது பெயர் பெற்றுள்ளது. படைவீடு எனும் ஊர் அ.கோ.படைவீட்டிலிருந்து மேற்கில் 2கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

புராணச் சிறப்பு:
அருள்மிகு ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்து ஜமதக்கினி முனிவரை மனம் முடித்து பரசுராமன் உள்ளிட்ட நன்மக்களை பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன கணவருக்கு பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள். அவ்வமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட நீரில் மட்குடம் உடைந்து அத்தண்ணீரால் உடம்பு முழுவதும் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து அன்னையில் சிரசை துண்டிக்க ஆணையிட, அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம் வந்து தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என்றும், தாங்கள் கோபத்தை அடக்கி தயை செய்ய வேண்டும் என்றும், பெற்ற தாயை கொன்ற என் கையையும் வெட்டிவிட்டேன் என்று கூறிய மகனிடம், வேண்டிட வரம் தருவதாக கூறினார். பரசுராமனோ பெற்ற தாயை மீண்டும் உயிர்ப்பித்து தர கோருகிறார். அவரும் மகன் விருப்பத்திற்கிணங்கி கமண்டல நீரை மந்திரித்து கொடுக்க, அவர் அதை பெற்றுக் கொண்டு தன் தாய் வெட்டுப்பட்ட இடத்தில் சென்று காலகதியால் அங்கே வெட்டப்பட்டு கிடக்கின்ற சண்டாளச்சி உடலில் தவறுதலாக ரேணுகாதேவியின் தலையை ஒட்டும்படி வைத்தும் நீரை தெளித்தவுடன் அன்னை சண்டாளப் பெண்ணின் உடம்போடு பிழைத்த நின்று தன் புதல்வனை பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டை சொன்னார். பின் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச் செயலால் வந்தது. இனி இதை மாற்ற முடியாது எனக் கூறியதனால், அதுமுதல் அவ்வேருபட்டவுடலுடன் ஜமதகினி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்துவரும் நாளில் அங்கு வந்த கார்த்தவீரிய அர்ச்சுணன் ஜமதக்கினி முனிவரிடமிருந்த காமதேனுவை தனக்கு வழங்க வேண்டுகிறான். முனிவர் வழங்க மறுத்ததால் , அவரைக் கொன்று காமதேனுவை கார்த்தவீரிய அர்ச்சுணன் அழைத்துச் சென்று விடுகிறான். கனவை இறந்ததால் ரேணுகாதேவி கணவர் உடலுடன் உடன்கட்டை ஏறினாள். அவ்வமயம் தெய்வ வசத்தால் மழை பொழிந்தது. அம்மழை நீரால் கடலை நெருப்பு அணைந்து அன்னை கொப்புளங்களுடன் ஆடை இன்றி எழுந்து வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு மகன் பரசுராமனை சிந்தித்தாள். உடனே பரசுராமர் வந்து மிக்கக் கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப, சஷ்த்திரிய குலம் முழுவதும் அழிக்க சாபமிடுகிறார். இதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும் படியும், இக்காரியம் விதிப்பயனாலானது என்றும் யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி சாந்தப்படுத்துகிறார்கள். பின் ஜமதக்கினி முனிவரை சிவப்பெருமான் உயிர்ப்பித்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூவுலகில் பூஜைக் கருவுருவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சுவர்க்கத்துக்கு செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார்.

அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள் பாளித்து வருகிறா
ள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக