ரேவதி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத் தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கு மென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.
சிறப்பம்சம்:
சந்திரனுக்கும், ரேவதிக்கும் சிவபார்வதியும் காட்சி கொடுத்ததால், இது ரேவதி நட்சத்திர தலமாக விளங்குகிறது.
ரேவதி, தினமும் அரூப வடிவில் (மற்றவர் கண்களுக்கு தெரியாமல்) இங்கு வந்து பூஜை செய்கிறாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரநாளில், இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியாக ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனுககும், அம்பாளுக்கும் பொருட்களை சமர்ப் பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.
நோய் தீர்க்கும் தலம்:
காசிக்கு அடுத்து காருகுடி என்ற சுலவடை இந்தப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதாவது, காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும். நீர், கண்சம்பந்தப்பட்ட நோய், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு:
1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன் [Surya/Sun]
அதி தேவதை [Ati Devatha] : சனி [ Saturn]
இருப்பிடம்:
திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.
திறக்கும் நேரம் : காலை 6- 11 மணி, மாலை 5- இரவு 8 மணி.
போன்:+91 -97518 94339,94423 58146.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கோயில் இருப்பதால், குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது நல்லது.
உத்திரட்டாதி
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக்க நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம்.
சிறப்பம்சம்:
தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்வதாக ஐதீகம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில், இங்கு வந்து ஹோமம் செய்து சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்கிறார்கள். இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.
பெயர்க்காரணம்:
தீயாகிய
அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் பிரச்னை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தலத்து பிரகன்நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத
முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார்.லட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர்.
பிரதான தேவதை [Pradhana Devatha] : அஹிர்புத்னயர் [Ahirbudnia]
அதி தேவதை [AtiDevatha] : காமதேனு [Kamadhenu]
இருப்பிடம்:
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ.
திறக்கும் நேரம்: காலை 6- மதியம் 12 மணி
போன்:+91 - 4371-239 212 99652 11768
பூரட்டாதி
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
ஸ்தல வரலாறு:
காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பம்சம்:
ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.
சகாதேவன் போல கல்வியறிவு:
கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும்
வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.
தல சிறப்பு:
காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி தியானம் செய்துள்ளார். இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வணங்கலாம். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.
கோயில் அமைப்பு:
மூலவர் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : அஜைகபாதர் [Ajaikapada]
அதி தேவதை [AtiDevatha] : குபேரன் [Kubera]
இருப்பிடம்:
திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரத்தைஅடையலாம்.
திறக்கும்நேரம்: காலை 7 - 9 , மாலை 5.30 - இரவு 7 மணி.
போன்:+91 - 94439 70397, 97150 37810.
சதயம்
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
ஸ்தல வரலாறு:
அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும்
புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
சிறப்பம்சம்:
அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81ம் வயதில், இத்தலத்தில் உழவாரப் பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. அப்பருக்கு தனி சன்னதி உள்ளது. சித்திரை சதயத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடத்தப்படுகிறது. அப்போது, பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது மனதை உருக்கும் காட்சியாக இருக்கும். அக்னிபுரீஸ்வரரின் துணைவியாக அம்பாள் கருந்தார் குழலி அருள்பாலிக்கிறாள். அக்னிபுரீஸ்வரர் நீங்கலாக, வர்த்தமானேஸ்வரர் சன்னதியும், அவரது துணைவியாக மனோன்மணி அம்மையும் அருள் செய்கின்றனர். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.
அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவர்த்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர். அம்பாள் கருந்தார்குழலிக்கு திருமணம் ஆகாத பெண்கள், மாலை பூஜையின் போது, வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : வருணன்[Varuna]
அதி தேவதை [ AtiDevatha ] : யமன் [Yama]
இருப்பிடம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி.
போன்:+91 - 4366-236 970.
அவிட்டம்
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்
பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும்கண்டுமிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த
மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது.கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம்என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது.
சுவாமி பெயர்க்காரணம்: பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே, அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும் சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.
சிறப்பம்சம்:
பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய தலமானது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, தங்கள் நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப் பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், மூளை வளர்ச்சிக்கும், குடும்ப ஒற்றுமை வளரவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. முந்திரிப்பருப்பு, நிலக் கடலை மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : வஸூக்கள் [Vasus]
அதி தேவதை [ AtiDevatha ] : வஸூக்கள் [Vasus]
இருப்பிடம் :
கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை செல்லலாம்.
திறக்கும் நேரம் : காலை 11 - மதியம் 1 மணி, மாலை 5 - 6 மணி.
போன்: +91 - 98658 04862, 94436 78579
திருவோணம்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக
சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.
சிறப்பம்சம்:
சந்திரபகவான் ஒரு சாபத்தினால், இருளடைந்து இருந்தான். இதனால், அவனது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள் இத்தலத்தின் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, மூன்றாம் பிறையன்றோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : விஷ்ணு [Vishnu].
அதி தேவதை [AtiDevatha] : விஷ்ணு [Vishnu]
இருப்பிடம்:
வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.
திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி-, மாலை 4.30 - இரவு 7.30 மணி
போன்:+91 - 4177 254 929, 94868 77896.
உத்திராடம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன்
அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.
உத்திராடம் நட்சத்திர ஸ்தலம்:
ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்) உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.
விசேஷ சிவத்தலம்:
பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. சித்திரை பிறப்பன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும். லிங்கோத்பவர் பூஜை: ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான் நினைத்த விஷயத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : விஸ்வேதேவர்கள் [Viswedevas].
அதி தேவதை [AtiDevatha] : விநாயகர் [Vinayaka ]
இருப்பிடம்:
சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திறக்கும் நேரம்: காலை 7 - 11 மணி, மாலை 5 - இரவு 8 மணி.
போன்:+91 - 99436 59071, 99466 59072.
பூராடம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம்
வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.
பூராடம் நட்சத்திர தலம்:
சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.
சித்தர் வழிபாடு:
முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர்
வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.
பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : ஜலதேவர் [Jaladevatha].
அதி தேவதை [AtiDevatha] : வருணன் [Varuna]
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 9 - 10 மணி, மாலை 5 - 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை.
போன்: +91 - 94434 47826, 96267 65472.
மூலம்
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக்
காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சிறப்பம்சம்:
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய
சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து
விளங்குவார்கள்.
வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.
சிறப்பம்சம்:
கோயிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.
சோழர் கோயில்: இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவர் ராஜராஜ சோழனின் தந்தை ஆவார்.
கோயில் அமைப்பு: பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
மூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : பிரம்மா[Brahma].
அதி தேவதை[AtiDevatha] : அசுரர் [Asura]
இருப்பிடம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 - 10 மணி, மாலை 5.30 - இரவு 7.30 மணி.
போன்: +91 - 44 - 2760 8065, 94447 70579, 94432 25093
கேட்டை
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.
பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.
சிறப்பம்சம்:
பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது.கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : இந்திரன் [Indra].
அதி தேவதை[AtiDevatha] : இந்திரன் [Indra]
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7- 9 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.
போன்: +91 97903 42581, 94436 50920
அனுஷம்
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
ஜமதக்னி மகரிஷி, தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான்.ஒருசமயம் அவன் இத் தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற தீவட்டி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, அது தானாகவே எரியத்துவங்கியது. தினமும் இவ்வாறு நடந்தாலும், இதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவன், மன்னரே! இந்தப்பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்ன, என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தை கண்டான். அதனை வெளியே எடுக்க எடுத்த முயற்சி தோற்றது.
எனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் பிரதிஷ்டை செய்தான். பிற்காலத்தில் கோயிலும் உருவானது.நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்
கொள்கிறார்கள். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரியபாண வடிவிலும், அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இந்தசிவனுக்கு சந்தனக்காப் பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.
பிரதான தேவதை[ Pradhana Devatha] :மித்ரன்[Mithra].
அதி தேவதை [Ati Devatha] :
லக்ஷ்மி[Lakshmi]
இருப்பிடம்:
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 - 11 மணி , மாலை 4 - இரவு 8 மணி
போன்:+91 - 4364 - 320 520.
விசாகம்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல்
பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.
அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.
சிறப்பம்சம்:
விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் ஒரு காலத்தில் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும், அவை இங்கிருக்கின்றன என்ற நம்பிக்கையால், இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். விசாகம் என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு வந்து வழிபடுவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.
பிரதான தேவதை [Pradhana Devatha] : இந்திராக்னி [Indragni].
அதி தேவதை [Ati Devatha] : சுப்ரமண்யர் [Subramanya]
இருப்பிடம் :
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
திறக்கும் நேரம்: காலை 6-பகல் 1 , மாலை 5- இரவு 8.30 மணி.
போன்:+91 - 4633 - 237 131, 237 343.
சுவாதி
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து,
நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.
சிறப்பம்சம்:
சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.
ஆயுள்பலம் தரும் சித்தர்:
கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி சாந்தமாக காட்சியளிக்கிறது. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது. ஆயுள்விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
சுவாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண் பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்.
பிரதான தேவதை[ Pradhana Devatha] : வாயு [Vayu]
அதி தேவதை [Ati Devatha] : வாயு [Vayu]
இருப்பிடம்:
சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
திறக்கும் நேரம்: காலை 8 10 மணி, மாலை 5 7 மணி.
போன்: +91- 93643 48700, 93826 84485
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக