துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன லக்னங்களுக்கு சுக்கிரன் அளிக்கும் மாளவ்ய யோகம் எவ்வாறு பலன் அளிக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
துலாம் :
துலாம் லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும்.
இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனியும் உடன் சேர்ந்து உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண் பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள்.
சனியும் பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் கடின உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், கருணையற்ற முடிவுகளை எடுப்பவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார்.
அதேநேரம் சனி வக்ரம் அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய யோகம் கிடைக்கும்.
லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப்பெறும் என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.
வலுவுடன் இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக இருப்பார். திறந்தமனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக்குணம் ஆகியவை ஜாதகரிடம் நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார்.
உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால் விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மேலான நிலைக்குச் செல்ல முடியும்.
விருச்சிகம் :
விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார்.
சுக்கிரன் இங்கிருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார்.
ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்.
சுக்கிரன் இங்கிருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார்.
ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்.
இந்த லக்னத்திற்கு சுக்கிரன் பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன சயன போகஸ்தானத்திற்க்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை தான்.
விருச்சிக லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன் பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். மேலும் ரிஷபம் சுக்கிரனின் பெண்ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.
விருச்சிக லக்னத்தவர்களுக்கு சுக்கிரனின் காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவைகளை சுக்கிரன் செய்வது கடினம். தனது தசையில் அவர் பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேசவாசம், பெண்களால் செலவு, முறை தவறிய போகம் ஆகிய பலன்களையே செய்வார்.
சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.
தனுசு :
தனுசு லக்னத்திற்கு நான்காம் இடமாகிய மீனத்தில் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார்.
தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர்.
ஆயினும் நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறுவதால் அவர் தனது திசையில் நல்ல பலன்களையே அளிப்பார்.
தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர்.
ஆயினும் நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறுவதால் அவர் தனது திசையில் நல்ல பலன்களையே அளிப்பார்.
இங்கு இருக்கும் சுக்கிரன் மிகச்சிறந்த வசதியான ஆடம்பரமான வாழ்வை ஜாதகருக்கு தருவார். நல்ல வீடு அமையும். உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் மிகச்சிறந்த லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார்.
சூரியனுடன் சேர்ந்து அஸ்தகங்கம் பெறும் நிலையில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலையை சுக்கிரன் உண்டு பண்ணுவார்.
இங்கிருந்து அவர் பத்தாம் இடத்தை பார்வையிடுவார் என்பதாலும் மீனம் குருவின் வீடு என்பதாலும் ஜாதகரை ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இனங்கள் மற்றும் தனது காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் ஈடுபடுத்தி செல்வம் தருவார்.
இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும் ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுபகாரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக பாதிக்காது.
மகரம் :
மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார்.
சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே பொதுவாக நன்மைகளைத் தரும்.
சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே பொதுவாக நன்மைகளைத் தரும்.
ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் தனது காரகத்துவங்களுக்கு உட்பட்ட சினிமா, தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், அவசியம் இல்லாத ஆடம்பர பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி பெரும் செல்வம் அளிப்பார்.
துலாம் சரராசி என்பதாலும் சரராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகம் செய்யும் என்பதாலும் மாளவ்யயோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணைய கூடாது.
மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக்கூடாது. அவ்வாறு வலுப்பெற்றாலும் வேறுவகையில் கெட்டு சூட்சும வலுதான் பெற வேண்டும்.
இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனிபகவான் சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு சனி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது.
இந்த இடத்தில் திக்பலத்தை சுக்கிரன் இழந்தாலும் அவர் தனித்து இருப்பதே நல்லது. பத்தாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய பெரிய வீடு, நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடுகொடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை, தாயார் வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார்.
கும்பம் :
கும்ப லக்னத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார்.
இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார்.
இங்கிருக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் தனது காரகத்துவங்களான சினிமா, தொலைக்காட்சித் துறை, வீடியோ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை, வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி பணக்காரர் ஆக்குவார்.
நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வீடு, நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார்.
இங்கு யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்ப லக்னத்திற்குப் பாவிகளான சூரிய சந்திர செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரத்தில் தான் அவர் இருக்க முடியும். எனவே யோகம் செய்யும் நிலையிலும் சில குறைகள் இருக்கும்.
மேலும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காம இச்சையில் அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும் செய்வார்.
கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், வருமானத்தை பெண்கள் விஷயத்தில் செலவு செய்பவராகவும் இருப்பார்.
மீனம் :
மீனத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார்.
ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார்.
ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார்.
அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. லக்னத்தில் சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ள பெரும்பாலானவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.
இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள்.
தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத முடிவுகளை எடுப்பார்கள்.
இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும். எப்போதுமே இளமையில் வரும் சுக்கிரதசை இவர்களை திசை திருப்பி விடுகிறது.
மீனலக்னத்திற்கு சுக்கிரன் தனது சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக் குடிமகன் ஆக்குவார். வாழ்க்கைத்துணையை வெளிநாட்டில் காண வைப்பார்.
விருந்துகள் கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு வாழ்க்கையும் தருவார்.
களத்திரகாரகன் என்பதால் மாளவ்யயோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் மூலமாக சுக்கிரதிசையில் செய்வார்.
அடுத்த வாரங்களில் புதபகவானால் கிடைக்கும் பத்ரயோகத்தைப் பற்றிப் பார்க்கலாம்.....
( நவ 16-22 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)
( நவ 16-22 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக