வியாழன், 19 பிப்ரவரி, 2015

பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்...?



எந்த ஒரு ஜாதகத்திலும், இயற்கைப் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது (சூரியன் அரைப் பாவர்தான். முழுமையான பாபக் கிரகம் அல்ல.) நேர்வலுவிழந்து, கெட்டு ஸ்தானபலம் இழந்திருந்தால்தான் அந்த கிரகங்கள் லக்ன யோகராகவே இருந்தால் கூட  அந்த ஜாதகர் ராஜயோகம் அனுபவிக்க இயலும்.
எனினும் சூட்சும விதியாக அந்த பாபக்கோள் வேறு வகையில் பலம் (சூட்சும வலு) பெற்றிருக்க வேண்டும். 

இயற்கைப் பாபக் கிரகம் என்று ஒரு கிரகத்தை எதற்காகச் சொல்கிறோம்? அதன் காரகத்துவங்கள் (செயல்பாடுகள்) கடுமையானதாக, மனிதனுக்கு துன்பம் விளைவிப்பதாக, கெட்டதாக இருப்பதினால்தான்.

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சனி பலம் பெற்று அவரது தசை நடைபெறுமானால் அந்த நபர் உடல் உழைப்பை பிரதானமாக கொண்டுள்ள கடினமான தொழில்களில் உடலை வருத்தி சம்பாதிப்பவராக இருப்பார் (மெக்கானிக், மூட்டை தூக்குபவர், கூலித் தொழிலாளிகள், ஆலை உழைப்பாளிகள், கீழ்நிலைப் பணியாளர் போன்றவை)

அப்படியானால் ஒரு கோடீஸ்வரனுக்கு சனி யோகராக இருந்து அந்த சனி தசை வருமானால் அவன் உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபடுவானா..?

பாபக் கிரகங்கள் ஜாதகத்தில் வலுப் பெற்ற நிலையில் இருந்தாலே ஒருவன் சுகவாசியாக இருக்க முடியாது. லக்ன யோகராகவே இயற்கைப் பாவக் கிரகங்கள் அமைந்தாலும் அவை முற்றிலும் நேர்வலு பெறக் கூடாது. 

அதற்குப் பதிலாக அக்கிரகங்கள் ஒருவகையில் கெட்டு வேறு வகையில் சூட்சும வலுப்பெற வேண்டும். மறைவு பெறலாம், நீசம் பெறலாம். அதனால் ஜாதகர் சுகவாசியாக ராஜயோகங்களை அனுபவிப்பார்.

அதே நேரத்தில் இன்னொரு விளைவாக அந்த வலுவிழந்த கிரகத்தின் ஆதிபத்தியங்கள் குறைவுபடும். 

அதாவது ஜாதகர் ராஜயோகத்தினை அனுபவிக்கும் அதே வேளையில் அந்த கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அந்த ஆதிபத்தியங்கள் மூலமாக அவர் வேதனைகளை அனுபவிப்பார்.

உதாரணமாக...,

துலா லக்னத்திற்கு சனி 4, 5 க்குடையவர் என்பதால், சனி ஸ்தான பலம் இழந்து கெட்டால் ஜாதகருக்கு உயர்கல்வி இருக்காது. தாயாரால் பயன் இருக்காது. குழந்தைகள் மூலம் வேதனை வரும்.

ஆனால் சனியின் காரகத்துவங்களான கடன், ஆரோக்கிய குறைவு, உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருத்தல், கடுமையான உடல் உழைப்பு, அடிமைத்தனம், இளமையில் முதுமை, கருப்பு போன்றவை அனைத்தும் ஜாதகரை நெருங்காது.

எடுத்துக் காட்டாக கீழே உள்ள ஜாதகத்தை பாருங்கள்.

இந்த ஜாதகம் ஒரு இந்தியப் பெரும் கோடீஸ்வரருடையது. இவர் தனது குரு தசையில் சூதாட்டத் தொழிலின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்தார். சனி தசையில் மதுபான தொழிற்சாலைகள் பக்கம் திரும்பிவிட்டார்.

ராகு
சனி
சூ,புத,
சுக்,
செவ்
குரு
சந்,
கேது
(சனி, செவ்வாய், குரு வர்கோத்தமம்)

இந்த ஜாதகத்தில் துலா லக்ன பாவியான குருபகவான் ஆறாமிடத்திற்கு உரியவராகி அதற்கு ஆறான பதினோராமிடத்தில் அமர்ந்து சுபரானார். துலாம் லக்னத்திற்கு வேறு எந்த இடத்தில் குரு அமர்ந்தாலும் சுபராக மாட்டார். 

எந்த ஒரு லக்னத்திற்கும் லக்ன பாபிகள் உபஜெய ஸ்தானமான 3,6,10,11 ல் நட்பு பெற்று அமருவதே நல்லது. கேந்திர கோணம் கூடாது. அதன்படியே பார்த்தாலும் துலா லக்னத்திற்கு குரு 3,6 ல் ஆட்சி, 10 ல் உச்சம் பெற்று வலுவாவது நல்லதல்ல. 

சாதாரண நிலையில் இருந்த இவரை குரு தசை மகா கோடீஸ்வரனாக்கியது. சனி தசையோ உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.

நீச சனியாக அவர் கெட்டாலும் சனி ஏழாமிடத்தில் திக்பலம் பெற்றும், சுபரான குருவின் பார்வையைப் பெற்றும் சூட்சும வலு அடைந்தார்.

துலா லக்னமாகவே இருந்தாலும் ராஜயோகாதிபதியான இயற்கைப் பாவி சனி நேர்வலுவடைந்தால் அவரது தீய காரகத்துவங்கள் தான் நடக்கும். ஜாதகர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்வார். 

 சனி நேர்வலு இழந்தால்தான் அந்த ஜாதகர் சுகவாசியாக இருப்பார். சனியின் கூலிவேலை, கடுமையான உடல் உழைப்பு தற்குறித்தனம், மந்தம், சோம்பல் போன்ற காரகத்துவங்கள் ஜாதகரை அணுகாது.

ஆனால் யோகாதிபதி கெட்டால் ஒருவன் எப்படி கோடீசுவரனாக ஆக முடியும்?

கெடக் கூடாது.

அதற்கு பதிலாகவே சனி திக்பலம் பெறுகிறார். குருவின் பார்வை பெறுகிறார். (துலாத்திற்கு குரு பாவியேதான். அவர் பதினோராமிடத்தை தவிர்த்து வேறு எங்கிருந்து பார்த்தாலும் கெடுதல்தான். இந்த ஜாதகத்தில் பதினோராமிடத்தில் அவர் சுபராகி வர்க்கோத்தமம் பெற்று வலுவானார்.)

சரி ...

இயற்கை பாபக் கிரகங்கள் கெட்டால் வேறு என்ன செய்யும்?

சனி கெட்டதால் அது இந்த ஜாதகரின் 4, 5 ஆம் பாவங்களையும், சனி அமர்ந்த 7 ஆம் பாவத்தையும் பாதிக்கும்.

ஜாதகர் யோகசாலியாக இருப்பார். ஆனால் 4, 5, 7 ம் பாவங்களின் மூலமாக அவர் மனவேதனைகளை அனுபவிப்பார்.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் சனி உச்சம் பெற்ற அனேக ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் உயரம் குறைந்தவர்களாக, பிடிவாதக் காரர்களாக, ஆலைகளில் உழைப்பாளிகளாக, அல்லது கையில் ஸ்பானரை பிடித்து வேலை செய்யும் மெக்கானிக்குகளாக, தன்னைச் சுற்றி உள்ள உலகத்தாரோடு ஒத்துப் போகாமல் வீண் சண்டையிடும் சாதாரண மானவர்களாகவே உள்ளனர்.

 உச்ச சனி தசையில் அவர்கள் சாதாரண அடிமை வாழ்வே வாழ்கின்றனர். 

இயற்கைப் பாபிகள் லக்னாதிபதியாகவே வந்தாலும் உச்சம், ஆட்சி போன்று நேர்வலுப் பெறுவது நல்லதல்ல. மறைவிடங்களில் வலுப் பெறுவது நல்லது. நேரிடையாக வலுப்பெற்றால் ஜாதகர் கொடூரமானவராக இருப்பார். அது வெளியில் தெரியும்படி நடந்து கொள்வார்.

எந்த ஒரு யோக ஜாதகத்திலும் இயற்கைப் பாவக் கிரகங்கள் கண்டிப்பாக பலவீனம் அடைந்தே பலம் பெற்றிருக்கும். அல்லது பலம் அடைந்திருந்தாலும், வேறுவகையில் பலவீனமாயிருக்கும். 

(ஆகஸ்ட் 3-9 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக