புதன், 11 பிப்ரவரி, 2015

ராசிக்கற்களா? ராசிக்குக் கற்களா


?


தனது ராசிக்கேற்ற ராசிக்கற்களை மோதிரமாக அணிந்து கொள்வது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளோரிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

காட்சி ஊடகங்களில் ஜோதிடர்களும், ஜோதிட(!) ஜுவல்லரிகாரர்களும் உங்கள் ராசி அதுவா? இந்தக் கல்லை மோதிரமாக அணியுங்கள்.. அந்த ராசியா?இந்தக் கல்தான் சரி, உங்களுக்கு புதன்தசை நடக்கிறதா? மரகதப்பச்சை மோதிரம் அணியுங்கள்.. குருதசையா? புஷ்பராகம் அணியுங்கள் என்று நீண்ட உரைகளை வாசித்து பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர்.

சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “ஜோதிடகலாரத்னா” ஜுவல்லரி ஜோதிடர் ஒருவர் ‘சிம்மத்தில் இருக்கும் சூரியனைப் புதன் பார்த்தால் அவர் அரசாங்கத்தில் எழுத்தர் வேலையில் இருப்பார்’ என்று பலன் வாசித்துக் கொண்டிருந்தார்...!

நேரடி ஊடகங்கள் வந்தபின் இதுபோல இருக்கிறது ஜோதிடத்தின் நிலைமை....!

சரி...

தனது ராசிக்கேற்ற கல்லை மோதிரமாக அணிவது சரிதானா? நடக்கும் தசையின் படியும் ராசி மோதிரம் அணியலாமா? போட்டவுடனே அது நல்ல பலனைத் தந்து விடுமா?

ஜோதிட சாஸ்திரத்தில் நமது ஞானிகளும், மேதைகளும் இப்படித்தான் நவரத்தினங்களை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்களா என்று யோசித்தால் நமக்கு மயக்கமே வந்து  விடும்.

ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்னங்கள் என்ன?

சூரியனுக்குமாணிக்கம்
சந்திரனுக்குமுத்து
செவ்வாய்க்குபவளம்
புதனுக்குமரகதம்
குருவிற்குபுஷ்பராகம்
சுக்கிரனுக்குவைரம்
சனிக்குநீலம்
ராகுவிற்குகோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்

ஆகியவைதான். 

இதில் ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், தனக்கு கெடுதல் செய்யும் அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா?

உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுனராசியில் பிறந்தவர் மரகதப் பச்சையை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?

என்னிடம் ஒருவர் வந்தார். சுயமாக உழைத்து முன்னேறி கோடீசுவரராக ஆனவர். அவருக்கு கடக லக்னம். எட்டில் சனி. சனிதசை ஆரம்பித்த நான்கு வருடங்களில் தொழிலில் பெரும் சரிவு. மனைவி, குழந்தைகள் பிரிந்து போய் விட்டனர். அடிமேல் அடி. கையில் நீலக்கல் வைத்து மோதிரம் போட்டிருந்தார். 

“எதற்காக நீலக்கல்?” என்றதற்கு சனிதசையும் நன்மை செய்வதற்காக ஜுவல்லரிகாரர் போடச் சொன்னார் என்றார்.

எனக்கு குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்பதோடு அதே குதிரை மண்ணையும் போட்டு மூடியது என்றுதான் தோன்றியது.

அஷ்டமாதிபதியின் கல்லை அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இன்று அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.

நவரத்தினங்களில் எதை அணியலாம்? எதை அணியக் கூடாது?

நமது மேலான ஜோதிட சாஸ்திரம் இதைப்பற்றி தெளிவாகச் சொல்வது என்ன?
  • ராசிப்படி ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறு.ராசிநாதன் அவரது லக்னப்படி பாதகாதிபதியாகவோ, ஜாதகருக்கு லக்னப்படி தீமை செய்யும் பகைக்கிரகமாகவோ இருந்தால் கற்கள் அணிந்தவுடன் கெடுதல்கள் நடக்கும். சிலர் இந்த மோதிரம் போட்டதிலிருந்து எனக்கு தலை வலிக்கிறது. அன்றே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்லுவது இதனால்தான்.
  • ஒருவரின் பிறந்த ஜாதகம் ஒரு முழுமையான ஜோதிடரால் தீர்க்கமாக ஆராயப்பட்டு லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் அடைந்திருந்தால் லக்னாதிபதியை வலுவாக்கும் விதமாக அந்தக் கிரகத்தின் வலுவைக் கூட்டும் விதமாக லக்னாதிபதியின் ரத்தினத்தை வாழ்நாள் முழுவதும் வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
  • (நமது ஞானிகள் ராசிக்கல் அணியச் சொன்னதன் நோக்கம், அதன் உண்மையான தத்துவம் இதுதான். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு ராசிக்கல் வியாபாரிகளுக்கு ஏது நேரம்..? சுருக்கமான வழி உன் ராசியைச் சொல்.. நான் கல்லைத் தருகிறேன் என்றாகி விட்டது. தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களின் வருகையும் இதற்கு வசதியாகி விட்டது.)
  • லக்னாதிபதிக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்
  • ஒருவருக்கு நன்மை தரும் கிரகம் பலவீனம் அடைந்து (5,9 போன்ற யோகாதிபதிகள்) அவர்களுடைய தசையும் நடக்குமானால் அந்தக்கிரகத்தின் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள அந்தக் கிரகத்திற்குரிய ரத்தினத்தை வலதுகை ஆட்காட்டி விரலில் அணியலாம்.
  • தீமை தரும் கிரகத்தின் ராசிக்கல்லை எந்தக் காரணம் கொண்டும் அணியக்கூடாது. ராசிக்கல் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே. கெடுதல் செய்ய விதிக்கப்பட்ட கிரகக் கல்லை அணிந்தால் அந்தக் கிரகத்தின் வலிமை அதிகமாகி இன்னும் அதிகமான தீமைகளைச் செய்யும். கல்லை அணிவதால் கெட்டகிரகம் நன்மை செய்யும் என்பது தவறு.
  • அதேபோல நவரத்னங்கள் ஒன்பதுதான். ஆனால் அவற்றுள் ஏராளமான வகைகள் உள்ளன. உதாரணமாக புஷ்பராகத்தில் பத்மபுஷ்பராகம், நீலத்தில் இந்திர நீலம் என நிறைய வகைகள் உண்டு. ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் மட்டுமே இவர் நீலம் அணியலாமா அல்லது இந்திரநீலம் வேண்டுமா என துல்லியமாக கணிக்க முடியும்.
  • 6,8க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும்அணியக் கூடாது)
  • ராகுகேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்னசுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.
  • ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக்கற்களை இடது கையில் அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
  • கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாபர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)
  • மிதுன, கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம்லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் பஞ்சலோகம் மற்றும் தங்கத்தில் அணியலாம்.
சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே மோதிரத்தில் ராகுவிற்குரிய கோமேதகம் மற்றும் கேதுவிற்குரிய வைடூரியத்தையும் சேர்த்து அணியச் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ராகுவும் கேதுவும் வடதுருவம் தென்துருவம் போன்றவை. ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் நேர்எதிராகச் சுற்றி வருபவை. ராகுகேதுக்களில் ஒன்று நன்மை தரும் அமைப்பில் இருந்தால் இன்னொன்று அதற்கு எதிரான நிலையில் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோதான் தோஷம் தரும். இரண்டும் சேர்ந்து அல்ல. இணையவே முடியாத இரு துருவங்களை அருகருகே வைத்து இணைத்து ஒரே மோதிரத்தில் அணிவது மகாதோஷம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது.

அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது. 

கற்களுக்குள் தெய்வசக்தியைப் புகுத்தி அவற்றைத் தெய்வங்களாக மாற்றி நாம் வணங்கி அருள் பெறும்உன்னத முறைகளைக் கொண்ட மேலான மதம் நமது இந்துமதம். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நமது புனிதத் திருக்கோவில்களின் வெளியே வாசலில் படிகளாக பதிக்கப்பட்டிருக்கும் கற்களும், உள்ளே இருக்கும் நமது தெய்வங்களும் ஒரே கல்லில் செய்யப்பட்டவைதான். இன்னும் சொல்லப்போனால் வாசல்படிக்கல்லும் தெய்வச்சிலையும் ஒரே பாறையில் இருந்து செதுக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் நாம் தெய்வங்களாக வணங்கும் நமது சிலைகள் அனைத்தும் அந்த தெய்வங்களின் பெயர், ராசி, நட்சத்திரங்களின்படி ஒரு கோடியே எட்டு தடவைகளுக்கும் மேலாக மந்திர உச்சாடனம் செய்துஉருவேற்றப்பட்டு, பலப்பல ஆகமமுறைகளின்படி சக்தியூட்டப்பட்ட பின்னரே பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

அதன் பிறகும் இந்தியாவின் புனித நதிகள் அனைத்திலிருந்தும் நீர் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், கைபடாத நீரான இளநீர், பசுவின் பஞ்சகாவ்யம் போன்றவைகளாலும் புனிதப்படுத்தப்பட்டு, நிறைவாக மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகே முழுசக்தி அடைந்து நமக்கு அருள்புரிகின்றன.

அதைப்போலவே ராசிக்கற்களும் முறைப்படி வலிமைப் படுத்தப்பட்டால்தான் நமக்கு பூரண நன்மை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக