“இந்தக் கோபுரத்திலிருந்துதான் வெள்ளையம்மாள் கீழே குதித்தாள்,” என்றார் பெரியவர்.
கழுத்து வலிக்க மேலே நிமிர்ந்து அந்தக் கோபுரத்தைப் பார்த்தோம். கிழக்கு வெள்ளை கோபுரம் என்று பெயர் எழுதியிருந்தது. 12-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நகர் மீது படையெடுத்து அதைச் சூறையாடினான் உலூக்கான் என்ற இஸ்லாமிய தளபதி. அப்போது கோயிலையும் நகரத்தையும் காக்க வேண்டி தளபதியைத் தள்ளிவிட்டு தானும் கோபுரத்திலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்தக் குடியானவர் சமூகப் பெண். அவள்தான் வெள்ளையம்மாள். சிந்தடிக் பெயின்ட் தீற்றல்களால் நிரம்பி பல வண்ண லுங்கி போன்று சமயங்களில் தோற்றமளிக்கும் பெரும்பாலான தமிழகக் கோபுரங்களுக்கு மாறாக அந்தக் கோபுரம் தூய வெண்ணிறத்தில் துலங்கியது, அந்த மாதரசியின் மாசற்ற தியாகம் போல.
ஏழு திருச்சுற்றுகள். ஒவ்வொன்றிலும் கோபுர வாசல்கள், வீதிகள். பெரு மதிள்கள் (எல்லா மதிள்களையும் சேர்த்தால் அவற்றின் மொத்த நீளம் 9 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்!). பெரிய பெருமாள் சன்னிதி போக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள், தனிக்கோயில்கள், மண்டபங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள். இவை அனைத்தையும் தன்னுள் அடக்கியிருக்கும் பிரம்மாண்டமான பேராலயம் இது. பூலோக வைகுண்டம். மாபெரும் பண்பாட்டு, கலை, கலாசார, வரலாற்றுப் பெட்டகம். தென்னிந்திய வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்தின் சுவடுகளும் அடுக்கடுக்காக இக்கோயிலில் பதிந்துள்ளன. சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை பல காலகட்டங்களைச் சேர்ந்த சிற்ப மரபுகளும், அவற்றின் பல வகைமாதிரிகளும் இந்த ஒரே கோயிலில் காணக் கிடைப்பது கலை, வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு பெருவரம்.
குழலூதும் பிள்ளை திருக்கோயில் என்று அழகுத் தமிழில் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி சன்னிதி ஹொய்சள சிற்பக் கலை மரபுப்படி அமைக்கப்பட்டது. கர்நாடகத்தின் பேளூர், ஹளேபீடு ஆகிய ஹொய்சளர் கோயில்கள் அந்தப் பகுதிகளில் கிடைக்கும் மென்மையான மாக்கல் கொண்டு கட்டப்பட்டதால் இன்றும் வழவழப்புடன் திகழ்கின்றன. அதே காலகட்டத்தில்தான் இக்கோயிலும் உள்ளூரில் கிடைக்கும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கல்லின் முரட்டுத் தன்மை காரணமாக சுற்றுச் சுவரில் உள்ள கோஷ்ட சிற்பங்களின் மேற்பகுதி பூச்சு உதிர்ந்து காட்சியளிக்கிறது. ஆயினும் சிற்பங்களில் அழகு கொஞ்சுகிறது.
குதிரை வீரர்களும் யாளி வீரர்களும் பல சிற்ப வடிவங்களும் அணிசெய்யும் முகப்புத் தூண்களை உள்ளடக்கிய, விஜயந்கர காலத்திய சேஷராயர் மண்டபம் தன்னளவில் ஒரு தனி அழகு கொண்டது. குதிரைகளின் வால்மயிர் திரிதிரியாக செதுக்கப் பட்டுள்ள நுணுக்கமும் வீரர்களின் கண்களில் தெரியும்கடுமையும் பெண்களின் நளினமும் உயிர்த்துடிப்புள்ளவை. பல சுவாரஸ்யமான சிற்பக் காட்கள் இத்தூண்களின் அடித்தளத்திலும் மற்ற பக்கங்களிலும் உள்ளன. உட்புறமுள்ள தூண்களில் உள்ள தசாவதாரக் கோலங்கள் வெகு அழகு. விஜயநகர, நாயக்க மன்னர்கள், கனவான்களின் சிலைகள் பெயர்க் குறிப்பு கூட இல்லாமல் தூண்களுடன் ஒட்டி நின்றுகொண்டிருக்கின்றன. இக்கோயிலில் உள்ள ஏராளமான வரலாற்று மனிதர் சிலைகளில் சில மன்னர்கள், சில ஜீயர்கள்- ஆசாரியர்கள் உருவங்களையே ஆதாரபூர்வமாக அடையாளம் காணமுடிகிறது என்று கோயிலொழுகு நூல் குறிப்பிடுகிறது. மற்றவர்கள் அந்தந்த காலகட்டங்களில் பிரபலமாக இருந்தபோது மக்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டிருக்கக் கூடும். என்ன செய்வது? இந்த மன்னர்களும் கனவான்களும் கொஞ்சம்கூட விவரமில்லாவர்கள். நாங்கள் தங்கியிருந்த தெலுங்குச் சத்திரத்தின் (ஸ்ரீரங்கநாத ஆர்ய வைஸ்ய ஸ்ரீனிவாச சுப்ரபாத ராமானுஜ கோஷ்டி கூடம்) அறைகளைக் கட்டித் தந்தவர்களைப் போல இருந்திருக்க வேண்டாமோ? சும்மா சொல்லக் கூடாது, ஒவ்வொரு அறையிலும் ஸ்ரீரங்கநாதர் படத்தோடு கூட இன்னொரு படம். பிதுங்கும் கன்னங்களுடன் ஒட்டியாணம் அணிந்த குண்டுப் பெண்கள், சஃபாரி சூட்டில் சின்னப் பையன்கள், மூலக்கச்சம் அணிந்த தாத்தாக்கள், கோட் சூட் போட்ட மீசைக்காரர்கள் எல்லாரும் அலங்கரிக்கும் பெரிய அளவிலான குடும்பப் புகைப்படம், நேர்த்தியாக பெயர்கள் பொறிக்கப்பட்டு லேமினேட் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.
சேஷராயர் மண்டபத் தூண்களில் இருக்கும் குதிரைகளுக்குத் துணையாக மண்டப ஓரங்களில் கருங்கல் தரைமீது இக்கால வீரமைந்தர்கள் தங்கள் இரும்புக் குதிரைகளை (இருசக்கர வாகனங்கள்) நிறுத்தி வைத்திருப்பதை கவனித்துக் கொண்டிருக்கும்போதே சர்ரென்று ஒரு கார் கோபுரவாசல் வழியே உள்ளே நுழைந்தது. ஒரு நாலுகால் மண்படத்துக்குள் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து சில ஆசாமிகள் இறங்கி உள்ளே சென்றார்கள். இன்னொரு கார் நேராக சேஷராயர் மண்டபத்துக்கு உள்ளேயே நுழைந்து மண்டபத்தின் வழியாகச் சென்று வெளிவந்து கோயிலுக்கு உட்புறம் சென்றது. மண்டபத்தின் ஒரு பகுதியில் படிகளை முழுக்க மண்மேடிட்டு வாகனங்கள் ஏறுவதற்கு வசதியாக ramp உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் கவனித்தோம். வந்தவர் E.O-வாம் – கோயிலின் நிர்வாக அதிகாரி! நாங்கள் அதிர்ச்சிடையந்து என்னங்க இது, கோயிலுக்கு உள்ளேயே காரை ஓட்டிட்டு வராங்க என்று பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டோம். “ஒரு மூணு வருசமா இப்படித்தான் நடக்குது. அதுக்கு முந்தில்லாம் வெளியே காரை நிறுத்திட்டு நடந்துதான் உள்ளே போவாங்க. இப்ப கார் அப்படியே உள்ள வந்திருது. அவனுங்கள யாரு, என்னத்தை கேக்கிறது?” என்று ஓர் இளைஞர் நொந்து கொண்டார். சார், ஒரு நிமிஷம் இதை அப்படியே நீங்க வீடியோல சொல்ல முடியுமா, எங்க வெப்சைட்டுல.. என்று காமிராவை வெளியே எடுத்தோம். அட போங்க சார் என்று கையைக் காட்டி விட்டு மின்னலாக மறைந்து விட்டார்!
தான்யலக்ஷ்மி சன்னிதிக்கு அருகில் கோயிலின் பாரம்பரிய ஸ்ரீபண்டாரம் (பொருள்கள் சேமித்து வைக்கும் அறை- ஸ்டோர் ரூம்) இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. அதற்கருகில் இடிபாடுகளுடன் காணப்படும் நான்கு உருளை வடிவ செங்கல் கட்டுமானங்கள் தென்படுகின்றன. இவை ‘திருக்கொட்டாரம்’ எனப்படும் மிகப் பெரிய தானியக் களஞ்சியங்கள். விஜயநகர காலத்தின் கோயில் கட்டடக் கலையில் இத்தகைய களஞ்சியங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழகத் திருக்கோயில்களில் உள்ளவற்றிலேயே மிகப் பெரிய களஞ்சியங்கள் திருவரங்கக் கோயிலில்தான் உள்ளன. மூன்று அடுக்குகளாக உள்ள இந்தக் களஞ்சியங்களில் ஒவ்வொரு நிலையிலும், தானியங்களை உள்ளே கொட்ட மிகப் பெரிய “வாசல்கள்” உள்ளன. மேற்பகுதி இப்போது தகர்ந்து விட்டது, ஆனால் உபயோகத்தில் இருந்த காலத்தில் சிறிதுகூட மழைநீர் உட்புகாதபடி கூரை அமைக்கப்பட்டிருந்ததாம். மேலும், எலிகளும் மற்ற பூச்சிகளும் உட்புகுந்து தானியங்களைச் சேதப் படுத்தாதிருக்கவும் வழிவகை செய்யப் பட்டிருந்ததாம். இப்போது முற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது. அருகில் போகவே பயமாக இருக்கிறது. இப்பகுதியைச் சீரமைத்து இந்தக் களஞ்சியங்களை நன்கு அருகில் சென்று பார்க்கும்படியாகச் செய்யவேண்டும். நம் முன்னோரின் கட்டடக் கலைக்கும், உணவுப் பொருள் நிர்வாகத் திறனுக்கும் ஒரு சிறந்த சான்றாக இதைக் காட்சிப்படுத்தலாம்.
இதே போல கோயிலுக்குள் பால் கிணறு, நெய்க் கிணறு (பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பாலையும் நெய்யையும் இதில் ஊற்றுவார்களாம்), தைலம் தயாரிக்கும் அறை ஆகியவையும் பிரம்மாண்டமாக இருந்தன. ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்த அதே திருமடப்பள்ளி அதே இடத்தில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! அரங்கனின் நைவேத்தியத்திற்குப் படைப்பதற்காக செடி அஞ்சு, கொடி அஞ்சு, கறி அஞ்சு என்று ஐந்தைந்து வகைக் காய்கறிகளை அன்றன்றே தோட்டத்திலிருந்து பறித்து சமைப்பார்கள் என்றும் அதற்காகவே மன்னர் ஒருவர் தோட்டம் அளித்த விவரமும் கோயிலொழுகில் படித்தது நினைவில் வந்தது. பெருமாளின் பூஜைக்கான மலர்கள் பல நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க மதுரகவி நந்தவனத்திலிருந்து வருகின்றன. சமீபத்தில் இந்த நந்தவனத்தை தமிழக அரசு அராஜக முயற்சிகள் மூலம் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது. பக்தர்களின் ஜாக்கிரதை உணர்வினாலும், துரித முயற்சியாலும் அந்த முயற்சி முறியடிக்கப் பட்டது. ஆனால், ஸ்ரீரங்கத்தில் பொதுவாக பசுமை மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம்..
என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்ற இடம் அதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் காங்கிரீட் காடாக மாறிவிட்டது.
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி
பூவணை மேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே
என்று இந்த நகரத்தைத்தான் ஆழ்வார் பாடினாரா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அடையவளைஞ்சான் என்று கடைசி மதிள் சுற்றுக்குப் பெயர். ஆனால் இப்போது சுற்றி எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி வீடுகள் அடைத்துக் கொண்டு நிற்க, அதில்தான் நாம் வளைய வரவேண்டியிருக்கிறது!
***
காலம் 13-ஆம் நூற்றாண்டு. ஒரு நாள் பராசர பட்டர் நம்பெருமாள் புறப்பாட்டுக்காக வழக்கம் போலக் காத்து நிற்கிறார். ஒருவரும் வந்து புறப்பாடு பற்றி சேதி தெரிவிக்காததால், என்னவென்று தானே சன்னிதிக்குள் வந்து விசாரிக்கையில், ஒரு நாய் உள்ளே வந்து விட்டதாகவும், அதற்காக சாந்தி ஹோமம் நடைபெறுவதாகவும், அதனால் கால தாமதம் ஆகிறதாகவும் சொன்னார்கள். இதைக் கேட்ட பராசர பட்டர் நேரே பெரியபெருமாள் கர்ப்பக் கிரகத்தில் போய் இப்படி விண்ணப்பம் செய்தாராம் -
அஸன் நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்யாபவாதே ந கரோஷி சா’ந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி ஸன்னிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி!
[ரங்கனே, உமது அருகில் வராத ஒரு நாயின் சம்பந்தமான பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவை செய்து கொண்டீரே. அந்த நாயினும் கடையவனாகிய அடியேன், தேவரீருக்கு அருகிலேயே வந்துவிட்டேனே, இதற்கு என்ன சாந்தி செய்வீர்?]
இது ஏதோ சமத்காரமாகக் கூறி அருளிய சுலோகம் அல்ல. மகா ஞானியும், மகா பக்தருமான பட்டர் தனது பரம கருணையினால் தன்னைத் தானே இவ்வளவு தாழ்த்திக் கொண்டு எம்பெருமானிடம் முறையிடுகிறார் என்பது இதற்கு முந்தைய சுலோகத்தைப் பார்த்தால் புரியும்.
ந ஜாது பீதாம்ருத மூர்ச்சிதானாம்
நாகௌகஸாம் நந்தனவாடிகாஸு
ரங்கேச்’வர த்வத் புரமாச்’ரிதானாம்
ரத்யாசு’னாம் அன்யதமோ பவேயம் !
[ரங்கேஸ்வரா, இந்திரலோகத்து சோலைப் புறங்களிலே அமுதத்தைக் குடித்து மயங்கிக் கிடக்கும் அமரர்களுள் ஒருவனாக ஒருகாலும் ஆகக் கடவேனல்லேன். தேவரீருடைய ஸ்ரீரங்க நகரைப் பற்றி வாழ்கின்ற திருவீதி நாய்களுள் ஒரு நாயாக ஆகக் கடவேன்.]
பராசர பட்டர், மணவாள மாமுனிகள், பிள்ளை உலகாசிரியர் (பிள்ளை லோகாசாரியர்), பிள்ளையுறங்கா வில்லிதாசர், கந்தாடை இராமானுச முனி….எத்தனை மெய்யடியார்கள், வைஷ்ணவ சமயத் தலைவர்கள் அரங்க நகரில் வாழ்ந்திருக்கிறார்கள்! நம்பிள்ளை முப்பது வருடங்களுக்கும் மேலாக வியாக்யானம் சொல்லி அருளி அவரது சீடர்கள் அமர்ந்து கேட்ட இடத்தை இன்றும் நாம் அடையாளம் காட்ட முடியும். உடையவர் ஸ்ரீராமானுஜர் பரமபதம் எய்தியதும் அவரது உடல் திருவரங்கம் கோயிலின் மண்டபம் ஒன்றிலேயே (அதுவரை அது அரங்கனின் வசந்தமண்டபமாக இருந்தது) பள்ளிப்படுத்தப்பட்டு, அங்கு அவரது சன்னிதி எழுந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணம் எழுதி அரங்கேற்றிய மண்டபம் தாயார் சன்னிதிக்கு எதிரில் இன்றும் இருக்கிறது. அன்பும், கருணையும், ஞானமும் பொலிந்து விளங்கிய எத்தனையெத்தனை ஆசாரியர்களும் மகான்களும் அடியார்களும், கலைஞர்களும் இங்கு பாதம் பதித்திருக்கிறார்கள் என்று எண்ணும்போதே மெய்சிலிர்க்கிறது. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள உள்சுற்று வீதிகளில் இன்றும் பல ஆசாரியார்களின் திருமாளிகைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த இடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன. பலவற்றில் அவர்களது சந்ததியார் வசிக்கிறார்கள் என்பது இந்த நகரத்தின் இடையறாத பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பறைசாற்றுகிறது. வரலாறு வாழும் வீதிகள் இந்த நகரின் தெருக்கள்!
15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஓவியத் தொகுதிகள் சுவர்களிலும் விதானங்களிலும் கூரைகளிலும் கோயில் நெடுகிலும் வரையப் பட்டிருக்கின்றன. ரங்கா ரங்கா கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வரும் மண்டபத்துக்குள் சென்று நிமிர்ந்து பார்த்தால், அங்கு ஸ்ரீரங்கம் கோயிலின் அனைத்து முக்கிய உற்சவக் காட்சிகளும் அபாராமான ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. நாயக்கர் கால ஓவியம் பாதி சிதைந்த நிலையில்! தூண்களும் சிற்பங்களும் கல்லிலே கண்ட கலைவண்ணம் ஆதலால் காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்றன. ஆனால் ஓவியங்கள் அப்படி இல்லை, அவற்றை மிகவும் கவனம் எடுத்துப் பாதுகாக்க வேண்டும். உலகெங்கும் பழைய ஓவியங்கள் அமைந்துள்ள பல இடங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஓவியங்களின் மீது நேரடியாக ஒளிபடாதவாறு விசேஷ கண்ணாடிகளைப் பதித்தும், வேறு சில உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் அவற்றைப் பாதுகாக்கிறார்கள். கேரளத்தின் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் கூட இப்படிச் செய்திருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் சித்திரக் களஞ்சியமாக இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் இதைப் பற்றிய அக்கறையும் கவலையும் கோயிலை நிர்வகிக்கும் துறையினருக்கு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கோயிலில் பல இடங்களில் சித்திரங்கள் தேய்ந்து மறையத் தொடங்கிக் கொண்டிருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்து சித்திரங்களை வெள்ளையடித்தே அழித்தொழித்த கலையுணர்வுப் பாரம்பரியம் மிக்க தமிழக இந்து அறநிலையத் துறையின் கையில் இந்தக் கோயில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் நடுக்கம் ஏற்படுகிறது.
பெரிய பெருமாள் சன்னிதிக்கு முன் வருகிறோம். அன்று பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாள் என்பதால் கோயிலில் நல்ல கூட்டம்; ஜேஜே என்றிருக்கிறது. இப்போது கோயிலில் பெரும் கூட்டத்தைக் கண்டால் நமக்கு அயர்ச்சியும் சிலசமயம் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆனால் அக்காலம் முதலே அடியார் திருக்கூட்டங்களை கோயிலின் ஓர் அங்கமாகவே கண்டிருக்கிறார்கள்.
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே
என்று பாடுவார் குலசேகராழ்வார்.
ரங்கவிமானத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் 24 தூண்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் அட்சரங்களுக்கு ஈடாக இவை 24 என்ற எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அழகு ததும்பும் ஆயிரக் கணக்கான தூண்களை இந்தக் கோயில் முழுவதும் பார்த்துப் பழகிவிட்டிருக்கிற கண்களுக்கு இந்தத் தூண்களில் ஏதோ சட்டென்று உறுத்துகின்றது. ஆ! இங்கே சிற்பவேலைப் பாடுகள் ஏதும் இல்லை. மொண்ணையாக, நாம் நவீன கட்டடங்களில் பார்க்கும் கிரானைட் தூண்கள் போல நிற்கின்றன. மேலும் கீழும் கிரானைட் இல்லாத பகுதிகளில் பார்த்தால், உள்ளே வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல் தூண்கள் இருப்பது தெரிகிறது. கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்.
இந்த மண்டபத்தைத் தாண்டி உள்ளே மூலவரைத் தரிசிக்கப் போகும் முன்பு அங்கு இருபக்கமும் உள்ள பெரிய உருண்டைத் தூண்களை (”திருமணத் தூண்கள்”) இருகைகளாலும் பற்றிக் கொண்டு போகவேண்டும் என்று பெரியவர் சொல்கிறார். அரவணை மேல் பள்ளிகொண்டிருக்கும் இன்பக் கடலான அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்!
காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்ன மாலைக்
கடியரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மனத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!
என்று ஆழ்வார் மாயவனை மனத்தூணிலே பற்றச் சொன்னதை அந்தக் கணத்தில் நினைவுறுத்தத்தான் இப்படி ஓர் ஐதிகம் போலும்!
பள்ளிகொண்ட பெருமாளை திருவடியில் தொடங்கி திருமுடி வரை சேவிக்கவேண்டும் என்றும் ஐதிகம்.“பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” என்று ஆழ்வார் பாடியதற்கு ஏற்றாற்போல பெருமாளுடைய கண்கள் விசாலமாக இருக்கின்றன. உறங்காவில்லிதாசரின் உலகப் பற்றை அறுத்து ஆட்கொண்ட கண்கள்! தரிசனத்தில் கடைசியில் அந்தக் கண்கள்மேல் தான் நமது பார்வை நிலைகுத்தி நிற்கிறது. உலகின் களங்கங்கள் அனைத்தையும் அருட்பார்வையால் துடைத்து அன்பையும் அமைதியையும் பொழியும் அந்தக் கண்களை எப்படியெப்படியெல்லாம் ஆழ்வார்கள் பாடிப் பரவசமடைந்திருக்கிறார்கள்!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்
என்ற ஆண்டாளின் பிரார்த்தனை மனதில் எழ, தரிசனம் முடிகிறது.
பெருமாளின் திருக்கண்களில் பதித்து அலங்காரம் செய்ய விலையுயர்ந்த மணிகள் ஒருகாலத்தில் இருந்தன. ஃபிரெஞ்சுக்காரர்கள் அவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டனர் என்று படித்திருக்கிறேன். அதைப் பின்னணியாகக் கொண்டு சாண்டில்யன் ராஜமுத்திரை என்று ஒரு சரித்திரப் புதினம் எழுதியிருக்கிறார். எங்கு போனாலும் காலனியம் உண்டாக்கிய காயங்களின், ஏற்படுத்திய இழப்புகளின் சுவடுகள் மறைவதில்லை; கண்முன்னே பூதாகரமாக நின்று கொண்டிருக்கின்றன. அரங்கனின் திருச்சன்னிதி உட்பட.
***
இந்தக் கோயிலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் அது எழுதித் தீராத சமாசாரம் என்று தோன்றுகிறது. ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார்அவர்கள் எழுதியிருக்கிறார். அதன் ஏழாவது (இறுதி) பாகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றேன். இருபது வருடங்கள் முன்பு அங்கு போயிருக்கிறேன். எத்தனையோ மாற்றங்கள் இத்தனை வருடங்களில்.
கோயிலொழுகு என்பதைப் பற்றி முதலில் கேள்விப் பட்டது சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூலமாகத் தான். 12-13ஆம் நூற்றாண்டுகளின் இஸ்லாமியப் படையெடுப்பின் போது பதினைந்தாயிரம் வைஷ்ணவர்கள் படுகொலை செய்யப் பட்டனர் என்று அவர் எழுதப் போக, அதற்கு கடும் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டன. தனது தரப்புக்கு சான்றாக கோயிலொழுகு நூலில் ஆதாரம் காண்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார் அவர். பிறகு ஸ்ரீவேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’ என்ற புதினத்தைப் படித்தபோது இது பற்றிய வரலாற்றுச் சித்திரம் கிடைத்தது. முஸ்லிம், இஸ்லாமியர், துருக்கர் போன்ற எந்தச் சொற்களும் இல்லாமல் ’தில்லிப் படைகள்’ என்றே சுத்தபத்தமாக அந்தப் புதினம் முழுதும் குறிப்பிட்டிருப்பார் ஸ்ரீவேணுகோபாலன். ஆனால், அன்றைய சூழலில் திருவரங்க வரலாற்றை ஆய்வு செய்து அவர் ஒரு புதினமாக எழுதியதே மிகவும் பாராட்டுக்குரிய செயல். திருவரங்கக் கோயிலில், வெள்ளையம்மாள் கோபுரம் போல பஞ்சுகொண்டான் வாசல் என்றே இன்னொரு நுழைவாயிலுக்குப் பெயர் இருக்கிறது. உலூக்கான் படையெடுப்பின் போது, அபாரமான போர்த் தற்காப்பு யுக்திகளை செயல்படுத்தி வீரப் போர் புரிந்து கோட்டையைக் காத்துப் பின் வீரமரணம் அடைந்தவர் பஞ்சுகொண்டான் என்ற தளபதி. இத்தகைய வரலாற்றுச் செய்திகளை எல்லாம் கோர்த்து எழுதப்பட்டது அந்தப் புதினம்.
பிறகு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்திருக்கும் கோயிலொழுகின் முதல் இரண்டு பாகங்களைப் படித்தபோது, அதில் இந்தப் படையெடுப்பு மற்றும் பல சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தெளிவாக விளக்கப் பட்டிருந்தன. முத்துவீரப்ப நாயக்கன் காலத்தின் கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் பற்றியும் பல செய்திகள் கிடைத்தன. ஸ்ரீராமானுஜர் வரலாற்றில் அவர் கர்நாடகத்திற்கு போக வேண்டிய நிர்பந்தம் குறித்து பல புகைமூட்டமான ஊகங்கள் உள்ளன. ராமானுஜரைத் தண்டிக்க அழைத்து வர ஆணையிட்டவனாக வைணவ குருபரம்பரை நூல்கள் குறிப்பிடும் கிருமிகண்ட சோழன் என்பவன் இரண்டாம் குலோத்துங்கன் அல்ல, அவ்யபதேச்யன் என்று குறிப்பிடப்படும் ஒரு குறுநில மன்னன் என்றும் அந்த நிகழ்வுகளின் பின்னுள்ள உள்நாட்டுக் கலகங்கள் பற்றியும் ஆதாரபூர்வமான செய்திகளை கோயிலொழுகு நூல் வழங்குகிறது.
ஏழாம் பாகம் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் சில முக்கியமான கருத்துகளை, நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாக இங்கு தருகிறேன்.
(தொடரும்…)
மேலும் படங்களுக்கு சுட்டவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக