இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவற்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர். பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒருவரான மோட்சலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
மீண்டும் சிருங்ககிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு சங்கராச்சாரியார். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.
பிறகு தமது உலக வாழ்வை நிறைவு செய்யத் திருஉள்ளம்கொண்டு, ஏழு மோட்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சியம்பதிக்கு விரைந்தார்.
காஞ்சி எல்லையிலேயே மன்னன் ராஜசேனன் ஆசாரியரைப் பணிந்து வரவேற்றான். சர்வ தீர்த்த கரையிலுள்ள விசுவேசுவரர் ஆலயத்தில் தங்கினார் நம் ஆசாரியர்
பராசக்தியான காமாட்சியின் அருள் பொங்கும் நகரம் அது எனக்கண்டார் ஸ்ரீசங்கரர். அவளது இருப்பிடமான ஸ்ரீசக்ரத்தைப் போலவே அந்நகரைப் மாற்றியமைத்தால் அங்கு அம்பிகையின் அருட்பொலிவு முன்னிலையிலும் அதிகமாகும் எனக்கண்டார். ஆசாரியரின் கட்டளைப்படி மன்னன் நகர சாலைகளை ஸ்ரீசக்ர வடிவில் மாற்றி அமைத்தான். அதன் மத்தியில் அம்பிகை எழுந்தருளும் இடமாக அமைந்தது ஸ்ரீகாமாட்சியின் ஆலயமான காமகோட்டம்.
அக்காலத்தில் கலிகால மக்களால் தாங்க முடியாத அளவுக்குக் காமாட்சியின் சக்தி உக்கிரமான வெளிப்பட்டு வந்தது. அவளை அணுகவே அனைவரும் அஞ்சினர். ஆனால் ஆசாரியரோ அன்புத்தாயிடம் செல்லும் அருமை மகனாக ஆனந்தத்துடன் காமாட்சியை அடைந்தார். அவளுக்கு முன் ஸ்ரீசக்ரம் வரைந்து அதில் அவளது அதிகப்படி சக்தியை எல்லாம் இழுத்து அடைத்துவிட்டார். இந்தபின் காமாட்சியின் உக்கிரம் நீக்கி, அவள் கருணையின் எல்லையில் உள்ள பேரழகு மூர்த்தியாக ஆகிவிட்டாள். இன்றும் காஞ்சி காமாட்சியின் இந்த அருள்பொலிவை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்
நன்றி:காஞ்சி பீடம்
நன்றி:காஞ்சி பீடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக