மகாபுத்திசாலியான சரஸவாணி மிகவும் சிக்கலான வினாக்களைக் கணை மழைபோல் விடுத்தாள். சங்கரரோ அனைத்திற்கும் அதியற்புதமான விளக்கங்களைத் தந்துவிட்டார்.
அதன்பின் சரஸவாணியால் ஏதும் செய்ய இயலவில்லை. கணவர் போனபின் இம் மண்ணுலகில் தான் இருக்க வேண்டாம் எனக்கருதி, சரஸ்வதிக்கு உரிய பிரம்மலோகத்துக்குக் கிளம்பினாள்.
ஆனால் சங்கரரோ வனதுர்கா மந்திரத்தை ஜபித்து, அதனால் அவளைக் கட்டிக் கிளம்ப வொண்ணாமல் நிறுத்தி வைத்தார். 'அம்மா!உனக்கு இந்த உலகத்திலேயே ஒர் உத்தமமான காரியம் வைத்திருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
'மண்டன மிச்ரர் துறவியாகி விட்டார்:சுரேசுவரர் என்ற ஸந்நியாசப் பெயருடன் சங்கரரின் சீடராகிச் செல்கிறார்'என்று வெளி உலகம் அறிந்ததும் ஏராளமான கர்மமார்க்கக்காரர்கள் சங்கரரின் ஞான மார்கத்தைக் தழுவலாயினர். ஒரு நிலையில் கர்மம் அவசியம் என்றும், பிறகு கர்மமற்ற ஞான அனுபவம் மட்டுமே நிற்கும் என்றும் கூறும் அத்வைதம் வெற்றிபெற்று வந்தது.
கடவுளிடம் உண்மையான அன்பு செலுத்துவதே பக்தி. உண்மையான அன்பு யாதெனில், அந்தக் கடவுளேதான் எல்லாமும் எனவே அவனை வழிபடும் நானும் கூட அவனேதான் என்பதை உணர்ந்து, அன்பினால் அவனன்றித்தானில்லாமல் கரைந்து ஒன்றாகி விடுவதுதான்.
ஆனால் சங்கரின் காலத்திலிருந்த பக்தி இவ்வாறு அத்வைத ஞானத்தோடு இணைந்ததாக இருக்கவில்லை. பல வேறு தெய்வங்களும் ஒரே கடவுள் எடுத்துக்கொள்ளும் பல வடிவங்கள்தான் என்பதை மறந்து-அவரவரும் தான் வழிபடுகிற தெய்வமே மற்ற தெய்வங்களைவிட உயர்ந்தது என்று வாதப்போர் செய்து வந்தனர். இது போதாது என்று அன்பே வடிவான கடவுளின் உக்கிர ரூபங்களைப் பலர் வழி பட்டு, அதற்காகக் தாங்களும் மிகப் பயங்கரமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். கர்ம. ஞான வழிகளைச் செம்மைசெய்த சங்கரர்-அன்பு மயமான ஆண்டவன் வழி பாட்டில் புகுந்துவிட்ட அச்சமூட்டுகிற, அருவருப்பூட்டுகின்ற அம்சங்களை விலக்கிக்கொண்டு நாட்டில் அருள்மாரியாகச் சஞ்சரித்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக