வியாழன், 24 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர் -9


                                                         
வியாசர் அருளிய பிரம்மசூத்திரம், வேத ரிஷிகள் அருளிய பத்து உபநிஷதங்கள், கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதை ஆகிய முன்று நூல்களும் ஸ்ரீசங்கரர் உரை இயற்றினார். இவைகள் 'பாஷ்யம்'எனப்படும். இந்நூலின் மூலக் கருத்துக்களையே மையமாகக் கொண்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அநேக வேதாந்த நூல்களை இயற்றியுள்ளார். அவைகளே 'பிரகரண கிரந்தங்கள்'எனப்படும். இவை தவிர குழந்தைகளுக்கு இதே கருத்தும், பக்தியும் கொண்ட 'கணேச பஞ்ச ரத்னம்'போன்ற ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.
இன்று உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், ஆன்மீக அனுபவசாலிகளும் சங்கரர் தந்துள்ள இந்த நூல்களைப் போற்றிப் புகழ்கிறார்கள். பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் காசிக்கு வருவார்கள். அங்கு கங்கா ஸ்நானம் விசேஷமானது. அதோடு காசியில் கோயில் கொண்டுள்ள விஸ்வநாத சிவபெருமான், விசாலாட்சி அம்பிகை, அன்னபூரணியம்பிகை இவர்களை தரிசிப்பது பெரும் புண்ணயமாகும். முற்காலத்தில் உத்தமமான குருவைத் தேடியவர்களும் காசிக்கே சென்றனர்.
இவ்விதம் காசிக்குச் சென்ற ஓர் இளைஞரே சநந்தனர். இவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். ஆசாரியரை காணக் காசி சென்ற இவர் ஒப்பில்லாத ஆசாரிய மணியான
சங்கரரைக் கண்டு அவரிடம் நிகரற்ற பக்தி கொண்டு சீடரானார். இவர் நரசிம்ம மூர்த்தியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
சநந்தனரின் பக்தி எவ்வளவு என்று உலகுக்கு உணரச் செய்ய வேண்டும் என உள்ளம் கொண்ட ஸ்ரீ சங்கரர் ஒரு நாள் சங்கரர் கங்கையின் இக்கரையில் அமர்ந்து உபதேசம் செய்து கொண்டிருக்க, அக்கரையில் அவரது வஸ்திரங்களை உலர்த்தி எடுத்து மடித்துக் கொண்டிருந்தார் சநந்தனர்.
திடுமென சங்கரர் "சநந்தனா வா! நான் கட்டியிருக்கும் வஸ்திரம் ஈரமாகிவிட்டது. காய்ந்த வஸ்திரம் விரைவில் கொண்டுவா என்று உரக்கக் கூறினார். குருநாதரின் கட்டளை வந்ததும் தம்மை மறந்தார் சநந்தனர். படகு அமர்த்திக்கொண்டு கங்கையைக் கடக்க வேண்டும். என்பதையும் பக்தியின் வேகத்தில் மறந்தார். குரு ஈரத்துணியுடன் நிற்கிறார்!'வா'என்று தன்னை அழைக்கிறார்" என்று மட்டுமே அவருக்குப் புரிந்தது. உடனே தாமே கங்கை வெள்ளத்தின் மீது நேராக நடக்கத் தொடங்கிவிட்டார்.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக