ஞாயிறு, 1 ஜூன், 2014

அகிலத்தின் தொடக்கம்


உலகத்தின் தந்தை!!!
உங்களுக்குத் தெரியுமா?
காசியப்ப முனிவரைத் தான் உலகனைத்துக்கும் தந்தை என புராணங்கள் புகழ்கின்றன. உலகுயிர்கள் யாவும் இவருக்குப் பிறந்தவை தானாம்!
பிரமனின் மகனான காசியப்பருக்கு (கஸ்யபர்/காசிபர்) 21 மனைவிகள்; இந்த இருபத்தொருவருக்கும் தான் இந்த பூலோக உயிர்கள் யாவும் பிறந்தன என்று விட்டுணு புராணம், அக்கினி புராணம், வான்மீகி இராமாயணம், வியாச பாரதம் முதலான புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. இந்த இருபத்தொருவரில் தக்கனின் மகள்மாரும் தாட்சாயணியின் சகோதரிகளுமான பதின்மூவர் அடங்குவர்.
காசியப்பருக்கு "மாயை" எனும் அசுர இளவரசியிடம் பிறந்தவர்கள் தான் நம் சூரபதுமன் முதலானவர்கள்.
காசியப்பரின் ஏனைய மனைவிமாருக்குப் பிறந்தவர்கள்:
1. அதிதி – ஆதித்தியர்கள் பன்னிருவர், முப்பத்துமூன்று தேவர்கள்
2, திதி— இரணியாட்சன், இரணியகசிபு, உட்பட்ட இராட்சத வம்சத்தினர். திதியின் குழந்தைகள் என்பதால் இவர்கள் தைத்தியர்கள்:
3. தனு – தேவதச்சனான மயன், இராகு – கேதுக்களின் தந்தையான விப்பிரசித்து முதலான அசுர கணத்தவர் பலரின் தாய். தனுவின் மக்கள் என்பதால், இவ்வசுர கூட்டத்தார் “தானவர்கள்”.
4. அரிட்டை - கந்தர்வர்கள்
5. மனு – மனிதர்கள், மனுவின் மக்கள் மானுடர்கள்.
6. முனி – இயக்கர்கள் (யட்சர்கள்)
7. .தாமிரை – கிரௌஞ்சி, சியேனி,காகி, திரிதராத்திரி முதலியோரின் தாய். இவர்கள் முறையே ஆந்தைகள், கழுகுகள், காகங்கள், அன்னங்கள் ஆகிய பறவைகளைப் பெற்றனர்.
8. குரோதவசை – காரி, மிருகி, மாதங்கி, சார்துளி, சுவேதை ஆகியோரின் தாய். இவர்களுக்கு முறையே சிங்கங்கள், குரங்குகள், யானைகள், புலிகள், எண்டிசை யானைகள் முதலான மிருகங்கள் பிறந்தன.
9. இரை – புல் பூண்டுகள்
10. கபிலை – குதிரைகள், கழுதைகள்
11. சுரபி— ரோகிணி, காமதேனு ஆகியோரின் தாய். இவர்கள்வழி வந்தனவே ஆடு, மாடுகள்.
12. அனலை – மரங்கள், செடி, கொடிகள்
13. சுரசை – ஊர்வன.
14. விநதை - அருணன், கருடன், இவர்கள்வழி வந்தவை பறவைகள்.
15. கத்துரு- நாகர்கள் பாம்பினங்கள்
இவ்வாறு நீள்கிறது இந்தப் பட்டியல்….
புராணம், புருடா, கற்பனை இதையெல்லாம் மீறி இங்கே நாம் பார்க்கவேண்டிய விடயம் ஒன்றே ஒன்றுதான்.
விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மனிதர்கள், தேவாசுரர்கள் எல்லோருமே ஒன்றுவிட்ட சகோதரர்கள். நமது சமயம் சொல்லும் அடிப்படைத் தத்துவம் அதுதான்!
இந்தப் பிரபஞ்சமும் அதன் எல்லாப் படைப்புகளும் உன் உறவுகள்!
அவற்றை உன் நெருங்கிய சொந்தங்களாக நினைந்து அன்பு பாராட்டவேண்டியதும் அவற்றுக்கு சேதம் விளைவிக்காது, உயிர்கள் மீது கருணை மிகுந்த பசுமை விரும்பியாக வாழவேண்டியதும் ஒவ்வொரு இந்துச் சைவனினதும் கடமையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக