வியாழன், 23 பிப்ரவரி, 2017

கிருஸ்ண மூர்த்தி பத்ததி முறையில் சோதிடம்

கிருஷ்ணமூர்த்தி பத்ததி அறிமுகம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பது தமிழகத்தை சேர்ந்த திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜோதிட பலன் கூறும் முறையாகும். இதை சுருக்கமாக கே.பி. ஜோதிடம் என குறிப்பிடுவர். இந்த முறையின் முக்கிய அம்சம் உப நட்சத்திர பகுப்பு முறையாகும். நட்சத்திரம் என்றால் என்னவென்று பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். உப நட்சத்திரம் என்றால் தெரியாது. பாரம்பரிய ஜோதிட முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் விம்சோத்தரி தசையானது, தசா – புக்தி - அந்தரம் என பிரிக்கப்பட்டுள்ளதை ஜோதிட சாஸ்திரத்தில் ஞானமுள்ளவர்கள் அறிவர். அந்த தசா-புக்தி-அந்தரங்களையே, திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிட முறையில் தசா-புக்தி பலன்கள் கூறும்போது பெரும்பாலன பாரம்பரிய ஜோதிடர்கள் நடப்பு புக்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் கூறுவார்கள். “நடப்பு புக்தி நாதன், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் உள்ளானோ,அந்த சார கிரகம் நின்ற பாவ பலனையும்,அந்த சார கிரகம் ஆதிபத்தியம் பெற்ற பாவ பலன்களையும் ஜாதகர் அந்த புக்தி காலத்தில் அனுபவிப்பார்” என்பதே பாரம்பரிய ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்த எளிமையான விதியாகும். திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த ஒரே ஒரு விதியை மட்டும் பாவ சக்கரத்திற்குள் புகுத்திப்பார்த்து, ஒரு குறிப்பிட்ட பாவ பலனை அந்த பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியே (புக்தி நாதன்) நிர்ணயம் செய்வார் என முடிவு செய்துள்ளார். அதன்படி “ நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் பாவத்தின் ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதியோ அல்லது அவர் நின்ற நட்சத்திர அதிபதியோ, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவத்திற்கு சாதகமான பாவங்களை குறிகாட்டினால்,ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நிச்சயமாக நடக்கும்,பாதகமான பாவங்களைக்குறிகாட்டினால், ஆய்வுக்குரிய பாவ பலன்கள் நடக்காது”. இந்த ஒரே விதியை மட்டும் பயன்படுத்தி அனைத்து வாழ்க்கை சம்பவங்களும் ஜாதகத்தில் ஆராயப்படுகிறது.
“ஒரு குறிப்பிட்ட பாவத்தில் நின்ற கிரகம்,அந்த பாவத்தில் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்கள்,அந்த பாவாதிபதி மற்றும் அந்த பாவாதிபதியின் சாரம் பெற்ற கிரகங்கள் ஆகியவையே அந்த பாவத்தின் குறிகாட்டிகளாகும்”. ஜாதகங்களை ஆய்வு செய்யும்போது கவனித்துப்பார்த்தால், சில சமயங்களில் 9 கிரகங்களுமே ஒரு பாவத்திற்கு குறிகாட்டிகளாக அமைவதைக்காணலாம். இத்தகைய சூழ்நிலைகளில் கால நிர்ணயம் செய்வது சற்று கடினமாக இருக்கும். இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஆளும் கிரகங்கள் என்ற ஒரு யுக்தியை இந்த முறையில் திரு. கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புகுத்தியுள்ளார்.
ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தில், உதயமான லக்கினத்தின் அதிபதி,லக்கினம் அமைந்த நட்சத்திர அதிபதி,சந்திரன் நின்ற ராசி அதிபதி,சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி,அன்றைய கிழமை அதிபதி ஆகிய ஐந்து கிரகங்களும் ஆளும் கிரகங்கள் எனப்படும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் சாதக,பாதக பாவங்கள் உண்டு.உதாரணமாக 7ம் பாவத்திற்கு சாதக பாவங்கள் 2-7-11ம் பாவங்களாகும்.1-6-10 ம் பாவங்கள் பாதகமான பாவங்களாகும். அதாவது ஒவ்வொரு சாதக பாவத்திற்கும்,அதற்கு 12ம் பாவம் பாதக பாவமாகும். 2க்கு 12ம் பாவம் 1ம்பாவமாகும்,7க்கு 12 ம் பாவம் 6ம் பாவமாகும்,11க்கு 12 ம் பாவம் 10ம் பாவமாகும்.
கிருஷ்ணமூர்த்தி பத்ததியை கற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உப நட்சத்திரம் என்றால் என்ன?
பாவம் என்றால் என்ன?
பாவ ஆரம்ப முனை என்றால் என்ன?
பாவ குறிகாட்டிகள் என்றால் என்ன?
சாதக பாவங்கள் என்றால் என்ன?
பாதக பாவங்கள் என்றால் என்ன?
ஆளும் கிகங்கள் என்றால் என்ன?
பயனுள்ள நிலைகள் என்றால் என்ன?
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் கேந்திரம்,பணபரம்,அபோக்லிமம், உபசயம், திரிகோணம்,மறைவுஸ்தானம் போன்ற பாவக பகுப்பு முறைகள் கிடையாது. கிரகங்கள் ராசிகளில் நின்ற பலன்,கிரகங்கள் பாவங்களில் நின்ற பலன், கிரகங்கள் பாவங்களைப்பார்த்த பலன், கிரகங்கள் பிற கிரகங்களை பார்த்த பலன், கிரக சேர்க்கை பலன், கிரக உச்ச பலன்,கிரக நீச்ச பலன்,அஷ்டக வர்கம், சோடச வர்கம் என எதுவும் கிடையாது.
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போல், கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள் கிடையாது.

3 கருத்துகள்: