புதன், 30 ஏப்ரல், 2014

தீப ஒளி சொல்லும் ஆருடம்

நிரஞ்சனா      நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதற்கு என்ன வழி? என்று யோசித்தார்கள் மகரிஷிகள். இறைவன் ஜோதி வடிவம். பிரம்ம தேவனுக்கும், ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் ஜோதி வடிவமாக காட்சி தந்தார் ஈசன். அதனால் அக்னி தேவனுக்கு உணவை சமர்ப்பித்தாலே அதை அவர் தெய்வங்களுக்கு கொண்டு சேர்ப்பார் என்பதை உணர்ந்து ஹோமம், யாகங்கள் செய்து அதில் காய், பழம், பூக்கள், அன்னம் போன்றவற்றை யாக தீயில் சமர்ப்பித்தார்கள் மகரிஷிகள்.   அதனால்தான் கோயில்களில் யாகம் நடத்தும்போது அதில் எளிய பக்தர்களாகிய நமது பங்கும் இருக்க வேண்டும். அதற்கு அந்த யாகத்திற்கு தேவையான பொருள்களை நமது வசதிக்கேற்ப தர வேண்டும். அந்த யாக தீயில் நாம் அற்பணிக்கும் பொருட்களை இறைவனிடம் செலுத்துவது அக்னி என்கிற நெருப்பின் பொறுப்பு.   அத்தகைய மகிமை வாய்ந்த அக்னியை நமது வீட்டின் பூஜையறையில் சுவாமி படத்தின் முன் தீபமாக ஏற்றப்பட்டு ஜொலிக்கும்போது அந்த இல்லத்திற்குள் துஷ்டசக்திகள் நெருங்காது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளும் கிடைக்கும். அதேபோல, புது வீடு புகும் போது, பழைய வீட்டில் இருந்தோ அல்லது புது வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்தில் இருந்தோ தீபம் ஏற்றி அந்த தீப ஒளியோடு புது வீட்டுக்குள் செல்வார்கள். இதனால் அந்த புது வீட்டில் நமக்கு தெரியாமல் அதுவரை இருந்த துஷ்டசக்திகள் தீப ஒளியின் வழியாக ஸ்ரீ மகாலஷ்மியையும், அன்னை சக்திதேவியையும்  கண்டு அஞ்சி விலகும். புது வீட்டில் சுபிக்ஷங்கள் நடக்கும். விளக்கின் தீப ஒளி கிழக்கு (அ) வடக்கு திசையை நோக்கிதான் இருக்க வேண்டும். தெற்கையோ அல்லது மேற்கையோ நோக்கி விளக்கு வைக்கக்கூடாது. குடும்பத்திற்கு ஆகாது. ஆனால் குத்து விளக்கில் ஐந்து முகமாக தீபம் எரிவதால் குத்துவிளக்குக்கு இந்த சாஸ்திரமுறை பொருந்தாது. ஆருடம் சொல்லும் தீப ஜோதி   இந்த தீப ஜோதியை (ஒளி) பார்த்து ஆருடம் சொல்லலாம் என்கிறது தீப சாஸ்திரம். அது எப்படி? தினமும் தங்களின் இராசி பலனை பார்க்கும் ஆர்வம்  பலருக்கு இருக்கிறது. இன்றைய நாள் இனிய நாளாக அமையுமா? என்று முதலில் இராசிபலனை பார்த்துதான் தங்களுடைய வேலையை தொடங்குபவர்களும் உண்டு. அதைபோல நமது வீட்டின் பூஜையறையில் உள்ள தீப ஜோதியை பார்த்தே இன்று நாம் தொடங்கும் செயல் எப்படி இருக்கும்? என்பதை அறியலாம்.   தீப ஆருடம் பார்க்கும் முன்னதாக சுத்தமாக குளித்து விட்டு, நமது கலாசாரத்திற்கு ஏற்ப நல்ல உடை அணிந்து, நெற்றியில் திருநீர்றோ, குங்குமமோ அல்லது சந்தனமோ வைத்துக் கொண்டு, இஷ்ட தெய்வத்தை மனதுக்குள் நினைத்து வரவழைத்து வணங்கி, பூஜையறையில் சுவாமி படத்தின் முன் விளக்கை ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு நீங்கள் நினைத்த காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு மற்ற தெய்வங்களையும், முன்னோர்களையும் நினைத்து வணங்க வேண்டும். பிறகு, நீங்கள் ஏற்றிய தீப விளக்கின் ஜோதியை பார்க்க வேண்டும். அந்த தீப ஜோதி ஆடாமல் அசையாமல் அப்படியே சுடர்விட்டு எரிந்தால், நீங்கள் நினைத்த காரியம் வெற்றியாக அமையும். உங்களுக்கு இடது பக்கமாக தீப ஜோதி அசைந்தால், நீங்கள் திட்டமிட்ட செயலுக்காக கடுமையாக முயற்சிக்க வேண்டும். எடுத்தோம் – முடித்தோம் என்றில்லாமல் இழுப்பறியில் காரியம் இருக்கும். அதனால் அந்த வேலையை அன்றைய தினம் செய்யலாமா? என்று நீங்கள் ஒருமுறை சிந்தித்து செயல்படலாம். அல்லது அந்த முயற்சியை முடிந்தால் அன்று தள்ளி போடலாம். வலது பக்கமாக தீப ஜோதி அசைந்தால், அன்றைய தினம் நீங்கள் நினைத்த வேலை நடக்கும். அந்த வேலையை முடிப்பதற்கு சிலர் உதவ வருவார்கள். இருந்தாலும் அலைச்சல் கொஞ்சமாவது இருக்கும். தீப ஜோதி தெறித்து தெறித்து எரிந்தால், தடங்கள் ஏற்படும். அந்த தடங்கள் உங்கள் நன்மைக்குதான் என்பதை பிறகு நீங்களே உணர்வீர்கள். தீப ஜோதி அணைந்துவிட்டால் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரும். தீப ஜோதி நிலையாக இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்தால் அன்றைய வேலையில் அதிகமாக அலைச்சல் இருக்கும். தீப ஜோதி ஒரே நிலையாக சுடர்விட்டு எரிந்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.   இந்த தீப ஆருடத்தை நம் முன்னோர்கள் அனுபவத்தில் அறிந்து கூறியது. அந்த காலத்தில் அரசர்கள் போர்களத்திற்கு செல்லும் முன்னதாக தங்களுடைய ஜாதகத்தை பார்த்து வெற்றி கிடைக்குமா? தோல்வி கிடைக்குமா? என்று ஆராய்வார்கள். அதே போல இந்த தீப ஆருடத்தையும் சில அரசர்கள் கடைபிடிக்கும் வழக்கமும் இருந்தது. நம்பிக்கையுடன் இறைவனை வணங்கி இந்த தீப ஆருடத்தை பார்த்து பயன் பெறுங்கள். நடப்பதைதான் நாம் முன்பே அறிகிறோம். சில சமயத்தில் நமக்கு சாதகமாக இந்த தீப ஆருடம் இல்லை என்றால், அது நமது நலனுக்காக இறைவனின் செயலாக இருக்கும். தீப ஒளியை ஐந்து நிமிடம் தொடர்ந்து பல நாட்கள் பார்த்து வந்தால், உடலுக்குள் தெய்வீக சக்தி உண்டாகும். நினைப்பது நடக்கும். ஆனால் தீப ஒளியை பார்க்கும்போது எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது. மனம் அமைதியாக இருக்க வேண்டும். எந்த நேரமும் இறைவனை நினைத்து வந்தால், இந்த தீப ஒளி ஆருடம், எந்த நாளும் நமக்கு சாதகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக