திங்கள், 29 டிசம்பர், 2014

பஞ்சாங்கம் என்றால்


வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற பஞ்ச (ஐந்து) அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் எனப்படும். தற்காலத்தில் வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று இருவகைப் பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன.

வாக்கியப் பஞ்சாங்கம் என்பது சித்தர்களாலும் ரிஷிகளாலும் கணித்து உருவாக்கப்பட்ட வாக்கியங்களை (சூத்திரங்களை) அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது.

இந்த வகைப் பஞ்சாங்கங்கள் கிரகங்களின் தினகதியில் ஏற்படும் நித்திய கதிபேதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் கணிக்கபடுகிறது, எனவே வாக்கியப் பஞ்சாங்கங்கள் தோராயமானது என்று கூறப்படுகிறது.

இவ்வகைப் பஞ்சாங்கங்கள் தஞ்சாவூர், திருநெல்வேலி, போன்ற தென்மாவட்டங்களிலும், ஆர்க்காடு மாவட்டங்களிலும், அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

வாக்கியப் பஞ்சாங்கங்களில், அசல் 28 நிர் பஞ்சாங்கம் (பாம்பு பஞ்சாங்கம்), திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கியப் பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், சர்வாலய அனுஷ்டான வாக்கியப் பஞ்சாங்கம், ஆற்காடு வாக்கியப் பஞ்சாங்க ஆகியவை குறிப்பிடத்தக்கன ஆகும்.

திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது தற்கால வானவியல் வல்லுனர்களால் கிரகங்களின் தினகதியில் ஏற்படும் நித்திய கதிபேதங்களை துல்லியமாக கணித்து, கணிக்கப்படுவது. எனவே வாக்கியப் பஞ்சாங்கன்களைக் காட்டிலும் திருக்கணிதப் பஞ்சாங்கங்களே துல்லியமானது, என்று கூறப்படுகிறது.

இவ்வகைப் பஞ்சாங்கங்கள் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீனிவாசன் திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீஜகத்குரு ஸ்ரீகாஞ்சி ஆச்சார்யாள் மடத்து திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கன ஆகும்.

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் பயன்பாட்டில் உள்ளது. மற்ற பகுதிகளில் திருக்கணிதப் பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் 7 க்கும் மேற்பட்ட பஞ்சாங்கங்களும், திருக்கணிதத்தில் 9 க்கும் மேற்பட்ட பஞ்சாங்கங்களும் உள்ளன. இவற்றில் எதைப் பயன் படுத்துவது? என்ற கேள்வி எழுவதக்கு வாய்ப்பு உண்டு. 

இதற்குப் பதில், 

அவரவர் அனுபவத்தில் எந்தப் பஞ்சாங்கம் சரியாக வருகிறதோ அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.


பஞ்ச அங்கங்களைப் பற்றிய விளக்கம்.

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை பஞ்ச அங்கங்கள் என்று முன்னமே பார்த்தோம்.

வாரம் :- வரம் என்பது ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகள் ஆகும். ஞாயிற்றுக் கிழமையின் அதிபதி சூரியன், திங்கள் கிழமையின் அதிபதி சந்திரன், செவ்வாய் கிழமையின் அதிபதி செவ்வாய், புதன் கிழமையின் அதிபதி புதன், வியாழக்கிழமையின் அதிபதி குரு, வெள்ளிக்கிழமையின் அதிபதி சுக்கிரன், சனிக்கிழமையின் அதிபதி சனி. இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

ராகு கேதுக்கள் சாயா கிரகங்கள் என்பதால் தனியாக கிழமை ஏதும் ஒதுக்கப் படவில்லை. ஆனால் ராகுவுக்கு செவ்வாய் கிழமை என்று சிலரும், சனிக்கிழமை என்று சிலரும், வெள்ளிக்கிழமை என்று சிலரும் கூறுகின்றனர். கேதுவுக்கு பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையையே அனுசரிக்கப்படுகிறது.

சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் அல்லது கிழமை (வாரம்).

திதி :- திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட கோணத்தை அடிப்படியாகக் கொண்டு கணக்கிடப் படுகிறது. திதிகள் வளர்பிறை திதிகள், தேய்பிறை திதிகள் என்று இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். 

வளர்பிறை திதிகளை சுக்கில பட்ஷம் அல்லது பூர்வ பட்சம் என்றும், தேய்பிறை திதிகளை க்ருஷ்ண பட்ஷம் அல்லது அமர பட்சம் என்றும் குறிப்பிடப்படும்.

அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை வளரபிறை திதிகள் என்றும், பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை தேய்பிறை திதிகள் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

அதாவது பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகிய 14 திதிகளையும் குறிப்பிடும்போது அமாவாசைக்குப் பிறகு என்றால் அந்தந்த திதிகளுக்கு முன்னாள் வளர் பிறை அல்லது சுக்கில பட்ஷம் அல்லது பூர்வ பட்ஷம் என்று குறிப்பிட வேண்டும். பௌர்ணமிக்குப் பிறகு என்றால் தேய் பிறை அல்லது கிருஷ்ண பட்ஷம் அல்லது அமர பட்ஷம் என்று குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக, அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியை வளர் பிறை பிரதமை என்றும், துவிதியை திதியை வளர் பிறை துவிதியை என்றும், இப்படியே மற்ற திதிகளுக்கும் குறிப்பிட வேண்டும். 

அதேபோல பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை திதியை தேய்பிறை பிரதமை என்றும் துவிதியை திதியை தேய்பிறை துவிதியை என்றும் குறிப்பிட வேண்டும். இப்படியே மற்ற திதிகளுக்கும் குறிப்பிட வேண்டும்.

Image


சூரியன் நின்ற பாகையிலிருந்து 12 பாகை வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலம் வளர்பிறை பிரதமை, 12 பாகையிலிருந்து 24 பாகை வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலம் வளர்பிறை துவிதியை இப்படியே மற்ற திதிகளுக்கும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் ரிஷபத்தில் 14 பாகை 26 கலையில் இருப்பதாகவும் அதே சமயத்தில் சந்திரன் கண்ணியில் 158 பாகை 48 கலையில் இருப்பதாகவும் கொள்வோம்.

சந்திரனின் பாகை கலையிலிருந்து சூரியனின் பாகை கலையை கழிக்க 158 48 – 14 26 = 144 பாகை 22 கலை வருகிறது. இந்த 144 பாகை 22 கலை 180 பாகைகளுக்குள்ளாக இருப்பதால் அந்த நாளில் அந்த நேரம் வளர் பிறை ஆகும். அட்டவணைப்படி அன்று அந்த நேரம் வளர்பிறை திரையோதசி ஆகும்.

மற்றொரு உதாரணத்தையும் பார்ப்போம். வேறொரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் சிம்மத்தில் 133 பாகை 38 கலையிலும் சந்திரன் மிதுனத்தில் 72 பாகை 29 கலையிலும் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம்.

சந்திரனின் பாகை கலையிலிருந்து சூரியனின் பாகை கலையை கழிக்கவேண்டும். ஆனால் சூரியனின் பாகை கலையை விட சந்திரனின் பாகை கலை குறைவாக உள்ளது. எனவே சந்திரனின் பாகை கலையுடன் 360 பாகையை கூட்டி பிறகு சூரியனின் பாகை கலையை கழிக்க வேண்டும்.
72 29 + 360 00 = 432 29 ; 432 29 – 133 38 = 298 51.

298 பாகை 51 கலை 180 பாகைக்கு மேல் இருப்பதால் அந்த நாளில் அந்த நேரம் தேய்பிறை ஆகும். அட்டவணைப்படி அன்று அந்த நேரம் தேய்பிறை தசமி ஆகும்.


மற்றவை அடுத்தப் பதிவில்.....

நட்சத்திரம் :- ராசி மண்டலத்தின் 360 பாகைகளில் ஒவ்வொரு 13 பாகை 20 கலை தூரத்தை சந்திரன் கடக்கும் காலம் ஒரு நட்சத்திரம் எனப்படும். ஒவ்வொரு 13 பாகை 20 கலை இடைவெளியிலும் குறிப்பிட்ட நட்சத்திரம் மிகப் பிரகாசமாக இருக்கும். எனவே அந்தந்த இடைவெளிக்கு அந்தந்த நட்சத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பது வழக்கம். (மேலும் விரிவாக ஜாதகப் பலன்றியும் பகுதியில் காணலாம்.)

உண்மையில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒற்றை நட்சத்திரம் இல்லை, இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரக் கூட்டமே. பூமியிலிருந்து பார்க்கும்போது ஒற்றை நட்சத்திரமாகத் தெரிகிறது. இந்த நட்சத்திர கூட்டங்கள் மொத்தம் 27 ஆகும். அவை

Image

பாகை கலை ரீதியாக கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறேன்.

Image


சந்திரன் இந்த அட்டவணையில் உள்ளபடி குறிப்பிட்ட பாகை கலையில் சஞ்சரிக்கக்கூடிய காலம் அதற்க்கு நேராக உள்ள நட்சத்திர காலமாகும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் விருச்சிகராசியில் 225 பாகை 15 கலையில் சஞ்சரிப்பதாக வைத்துக்கொள்வோம். அட்டவணையின்படி 225 15 என்பது 213 20 க்கும், 226 40 க்கும் இடைப்பட்டிருப்பதால் அன்று அந்த நேரம் அனுஷநட்சத்திரம் ஆகும்.


அடுத்தப் பதிவில் இன்னும் வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக