வியாழன், 25 டிசம்பர், 2014

புலமையும் வறுமையும் (ஆய்அண்டிரன்)

“கொடிது கொடிது வறுமை கொடிது“ என்பார் ஔவையார். பாலைநிலத்தின் கொடுமையைப் புலப்படுத்த எண்ணிய புலவர் “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்“ என்று வறுமைவாய்ப்பட்டவனின் இளமையைக் குறிப்பிடுகிறார். பாலைநிலத்தைவிட வறுமை கொடியதாக இருந்ததை அவ்வரிகள் தெளிவுறுத்துகின்றன. பண்டைக்காலத்தில் புலவர்கள் வானம்பாடிகளாய்த் திரிந்தனர். அவர்களது வாழ்க்கை வளமானதாக இருக்கவில்லை. வறுமையாளராகவே புலவர்கள் இருந்தனர். வறுமையைத் தொலைக்க வள்ளல்கள் எங்குள்ளனர் என்று தேடிஅலைந்து, அவர்களைப் பாடிப் பரிசில் பெற்றனர். இப்புலவர்கள் பிறரை அண்டி வாழ்ந்தனர். வறுமையின் கொடூரத்தால் பாதிப்புற்ற இப்புலவர்கள் அதன் கோரத்தினை பலகோணங்களில் வளமான இலக்கியங்களாக்கினர். சில புலவர்களைத் தவிர பெரும்பான்மையான புலவர்கள் வறுமையில் வாடினர். அவர்களின் அவலக் குரல்களினை எதிரொலிப்பவையாகப் புறநானூற்றுப் பாடல்கள் திகழ்கின்றன. பசியின் கொடுமை பசியினால் உடல் வற்றி சுற்றத்தாருடன் கேட்போர் பலர், உதவுபவர் சிலர் என யாழை மீட்டிப் பாடி தங்கள் சுற்றத்தாரின் பசியைப் போக்குபவர் யார்? என வருந்துகின்ற பாணரை, ‘‘உடும்பு உரித்து அன்ன என்புஎழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து ஈங்குஎவன் செய்தியோ பாண?“ (புறம்.68)என விளித்து அவர்களை ஒரு வள்ளலிடம் கோவூர்க்கிழார் ஆற்றுப்படுத்துகிறார். பசியானது துரத்த அதனைப் போக்குவதற்கு ஆய்அண்டிரனைப் போய்ப்பார்த்த துறையூர்ஓடைக்கிழார் என்ற புலவர், “ஆய்வேளே உன்னையே நம்பி வந்திருக்கின்றேன். என் கிழிந்த அழுக்கடைந்த கந்தல் துணியில் ஒட்டிய ஈரும் பேனும் பகையா? என்னை வருத்தும்பசி பகையா? என்று வேதனையுடன் வினவி, வள்ளளே நீ எமக்கு உதவுவதே உண்மையான ஈகையாகும். நீதரும் செல்வத்தைக் கொண்டு நான் உண்டு உயிர் வாழ்வேன் (புறம். 136) என்று தனது பசிபோக்க பொருள் தருமாறு யாசிக்கிறார். தனது பசிக்கு உணவிடுவோரைத் தேடி புலவர்கள் சுறத்தாருடன் அலைந்தனர். பசியே அவர்களைத் துரத்தியது. “பசிவந்தால் பத்தும் பறந்துபோகும்“ என்பதற்கேற்ப தங்களின் தன்மானத்தை விடுத்து, வள்ளல்களிடம் தங்களின் பசித் துன்பத்தைக் கூறி அதனைப் போக்குமாறு வேண்டுகின்றனர். மருதன் இளநாகநானார் என்ற புலவர் பசியால் வருந்தி, தன் துயர் போக்க ஆய்அண்டிரனைப் பார்க்கச் செல்கிறார். அவனைப் பார்த்து, சுமைகளைச் சுமந்து சுமந்து தோள் வடுப்பட்ட இளைஞர்களே பலர். எமது விறலியர் நீண்ட நேரம் நடந்ததால் களைப்புற்றனர். வள்ளலே நான் உண்மையையே கூறுகிறேன். எனது வறுமைநிலையைப் போக்க உன்னையே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன். நீ போருக்குப் புறப்பட்டுப் போய்விட்டால் நானும் என் சுற்றமும் பசியால் வாடி அழிந்து போவோம். ஆதலால் நாங்கள் பசியால் துன்புற்று அழியாமல் இருக்க உதவி செய்க என்று வேண்டுகிறார். எங்கே தாங்கள் பசியால் பொய் கூறுவதாக அரசன் நினைத்து உதவாதிருந்துவிடுவானோ என்று அஞ்சி புலவர், “வாழ்தல் வேண்டி பொய் கூறேன் மெய்கூறுவல்“ (புறம், 139) என்று உரைக்கின்றார். அதனைக் கேட்டு ஆய்அண்டிரன் அவர்களது பசியைப் போக்குகிறான். உணவு சமைக்க அரிசி கேட்டல்உணவு சமைப்பதற்குப் புலவர்கள் வள்ளல்களிடம் அரிசியைத் தருமாறு கேட்டுள்ளனர். அவ்வரிசியை வாங்கி உணவு சமைத்துத் தங்களது பசியைப் போக்கிக் கொண்டனர். இச்செய்தியை ஆய் அண்டிரனைப் பற்றிய பாடலில் ஔவையார்,“வளைக்கை விறலியர் படப்பைக் கொய்தஅடகின் கண்ணுறை ஆக யாம் சிலஅரிசி வேண்டினெம்“ (புறம், 140)என்று குறிப்பிடுகின்றார். பொற்காலம் என்று புகழாரம் சூட்டப்படுகின்ற அக்காலத்தில் ஒரு பிடி அரிசிக்காகப் புலமையுடையோர் அரண்மனை வாயிலில் கையேந்தி நின்றதை இதன் வாயிலாக நாம் உணரலாம்
வீடுதோறும் சென்று இரந்துண்டநிலை “ஈயென இரத்தல் இழிவானது“ எனப் பாடிய புலவர்களே வறுமையின் கொடுமையினால் பசி தாளமுடியாது, பசியைப் போக்க உழவர்களின் வீடுகள் தோறும் சென்று இரந்து உண்கின்றனர். இக்கொடுமையைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது. உறையூரைச் சேர்ந்த ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் ஆதரிப்பார் யாருமின்மையால் ஆய்அண்டிரனைப் பார்க்கச் செல்கின்றார். அவனைப் பார்த்து, ‘‘ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்வை“ (புறம்.37)என உழவர் வீடுதோறும் இரந்துண்ட தமது வறுமை நிலையை எடுத்துக்கூறி தம்மை ஆதரிக்குமாறு வேண்டுகிறார். பகல் நேரத்தில் மட்டுமல்லாது இரவிலும் வள்ளல்களின்இல்லம் சென்று புலவர்கள் வறுமையின் காரணமாக உணவை இரந்து உண்டு வாழ்ந்துள்ளனர். சூரியன் மறைந்து சிலபோது சென்றபின்னர், ஓய்மான் நல்லியாதனுடைய வீட்டின் நெற்கரிசையின்(வைக்கோர் போர்) அடியிலே நின்று, தடாரிப் பறையை இசைத்துப் பாடுகிறார் புலவர் புறத்திணை நன்னாகனார். நிலவும் கிழக்கே எழுகிறது. புலவரின் நிலையை அறிய முடியாதவாறு மாறியிருந்த அவரது உருவத்தையும், நைந்து கிழிந்த என் கந்தல் உடையையும் நல்லியாதான் கண்டான். அவரது நிலையைக்கண்டு இரங்கி அவரை அழைத்துச் சென்று அவர் கைகளில் உள்ள கைத்தாளத்தைத் தான் வாங்கிக் கொண்டு கள்ளும் சூடான இறைச்சியையும் கொடுத்து அவரது பசியை முதலில் தீர்க்கின்றான். பின்னர் அப்புலவரின் வறுமை தீரச் செல்வமும் தருகிறான். இதனை, ‘‘விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்சிதாஅர் வள்பின்என் தடாரிதழீஇப்பாணர் ஆரும் அளவை யான்தன்யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்“ (புறம். 376)என்ற பாடலில் புலவர் எடுத்துரைக்கின்றார். இன்றைய இரவுப் பிச்சைக்காரர்களின் நிலையைப் போன்று அக்காலப் புலவர்களின் நிலை இருந்ததை மேற்கண்ட பாடல் தெளிவுறுத்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக