செவ்வாய், 20 ஜனவரி, 2015

ராஜயோகம் என்றால் என்ன..?கடந்த சில மாதங்களாக முக்கியமான சில யோகங்களைப் பற்றி நான் உங்களுக்கு விரிவாக விளக்கி வந்த நிலையில் அந்த ராஜயோகங்கள் முறையாக அமைந்து அவற்றால் மேம்பட்ட ஒரு உதாரண புருஷரை தற்போது பார்க்கலாம் வாருங்கள்......

சாதாரண யோகங்கள் ஆயிரக்கணக்கான ஜாதகங்களில் இருக்கக் கூடும். ஆனால் தர்மகர்மாதிபதி யோகம் போன்ற ராஜயோகங்கள் சிறிதும் பழுதின்றி எந்த வித பங்கமும் அடையாமல் கோடியில் ஒருவருக்குத்தான் அமைகின்றன.

‘ராஜயோகம்’ என்றால் ‘அரசனுக்குரிய அமைப்பு’ என்று அர்த்தம். எனவே இங்கு நான் அதற்கு உதாரணமாக ஒரு அரசனின் ஜாதகத்தைத்தான் சொல்ல முடியும்..

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்திய ஜோதிடத்தின் ஆணிவேர்களான தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் ஒரு அரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதிய விதிகளை மெய்ப்பிக்கும் விதமான ஜாதகத்தினைக் கொண்டு பிறந்த இந்த இன்றைய ‘முன்னாள் அரசர்’ ஜோதிடத்தை நம்பாதவர்.....!

அது மட்டுமல்லாது உலகின் அனைத்து புனித மார்க்கங்களும் “என்னை நம்பு... இல்லையெனில் வெளியேறு” என்று சொல்லும் நிலையில் தனது சிறப்பம்சங்களில் ஒன்றாக தன்னை நம்பாதவனையும் ‘நாத்திகன்’ என்று பெயரிட்டு அழைத்து அவனுக்கும் விளக்கங்கள் சொல்லி அணைத்துக் கொள்ளும் எனது மேலான இந்து மதத்தை நம்பாத நாத்திகர்....! 

எந்த பின்னணியும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, பரம்பொருளின் அருளாலும், தனது திறமைகளாலும், யாராலும் மறுக்க முடியாத தன் அயராத உழைப்பாலும் அரசனாகி இன்று தொண்ணூறு வயதை நெருங்கி நிறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் (2012ல் எழுதப்பட்டது) இந்த முதுபெருங்கிழவரின் ஜாதகம் பல்வேறு ஜோதிடர்களால் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் பட்டதுதான்.

ஆனால் எனது கோணத்தில் முற்றிலும் வேறுவிதமாக இந்த ஜாதகத்தை இதுவரை யாரும் விளக்காத ஒரு பார்வையில் இப்போது சொல்லுகிறேன் வாருங்கள்....

“அரச ஜாதகம்”


புத
சூ, சந்
சுக்
கேது
3-6-1924
லக்
செவ்
ராகு
குரு(வ)
சனி(வ)

முதலில் இந்த ஜாதகத்தின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாக ஆராயலாம்.

இவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் அனைத்தும் ஒரு ‘ஸ்பைரல் காலக்ஸி’ போல பரந்து விரிந்து அமர்ந்துள்ளன.

இந்த ஜாதகத்தில் எந்த கிரகமும் அஸ்தங்கதம் அடையவில்லை என்பதோடு எந்தக் கிரகமும் பகை, நீசத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (ராகு கேதுக்களின் நிலை வேறு.)

சூரியனுக்கு ரிஷபம் பகைவீடுதான் என்றாலும் அவர் அங்கே பலம் பெற்ற லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் தோஷம் நீங்குகிறது.

முக்கியமாக ராஜ லக்னங்கள் எனப்படும் சர லக்னங்களில் முதன்மை சர ராசியான கடக லக்னத்தில் இந்த ஜாதகர் பிறந்திருக்கிறார்.

சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மகரம் ஆகிய நான்கில் கடகத்திற்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு என்று கேட்பீர்களே ஆனால் மற்ற மூன்று ராசிகளின் அதிபதிகளும் இரு ஆதிபத்தியம் பெற்று இன்னொரு கெட்ட வீட்டிற்கும் அதிபதி ஆகும் நிலையில் சந்திரன் மட்டும் தூய லக்னாதிபதி எனும் நிலையை மட்டும் அடைவதால் சர ராசிகளில் கடகம் மட்டும் தனித்துவம் பெற்றது மற்றும் உயர்வானது என்பது ஒரு சூட்சுமம்.

இந்த ஜாதகத்தில் அமைந்துள்ள முக்கியமான யோகங்கள் என்னவென்று பார்த்தால்....

1. லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகம்

2. தர்மகர்மாதிபதி யோகம்

3. கிரகங்களின் சஷ்டாஷ்டக யோகம்

4. நட்புக் கிரகங்களின் பார்வை பலன் யோகம்

5. கஜகேசரி யோகம்

6. பங்கமடைந்த சச யோகம்

7. ருசக யோகம்

8. ஜெயமினி மகரிஷி சித்தாந்தப்படி பதா லக்னத்திற்கு 3,6,8,12 ல் 

     பாவக்கிரகங்கள் அமைந்த யோகம்.

9. வீடு கொடுத்தவர்களின் வலிமை யோகம்

இவை தவிர்த்து அமலா யோகம், கமலா யோகம், குஷ்பு யோகம், சிம்ரன் யோகம் என்று பழைய கிரந்தங்களின்படி சில ஜோதிடர்கள் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

என்னுடைய அனுபவ எழுத்துக்களைப் படிப்பவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது மூல நூல்களிலும் அவற்றின் விளக்க நூல்களிலும் சொல்லப் பட்டிருக்கும் ஏராளமான யோகங்கள் சில தனி மனிதர்களின் ஜாதகங்களில் மட்டுமே இருந்த சில அமைப்புகள் மட்டும் தான். அந்த யோகங்களில் பல அதே நிலைகளில் இன்னொரு மனிதனுக்கு அமையப் போவதே இல்லை.

ஆகவே அந்த யோகம், இந்த யோகம் என்று மனக்கோட்டை கட்டுவதை விட்டு விட்டு அனைவருக்கும் பொருந்தி வரும்படியான முக்கியமான சில அமைப்புகளை மட்டும் ஒருவருடைய ஜாதகத்தில் கவனித்தாலே போதுமானது.

இனி மேலே சொன்ன யோகங்களை விரிவாக விளக்குகிறேன்....லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகம்.

எந்த ஒரு ஜாதகத்திலும் யோகங்களை எடுத்துச் செய்ய அதாவது ஜாதகரை வழி நடத்த லக்னமோ, லக்னாதிபதியோ வலுவான நிலையில் இருக்க வேண்டும். லக்னாதிபதி பாவக்கிரகமாயிருந்தால் சூட்சும வலுப்பெற வேண்டும். லக்ன நாயகன் வலுவிழந்தால் ஜாதகத்தில் இருக்கும் எந்த யோகமும் வேலை செய்யாது.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை மதியாகி சுபர் எனும் நிலை பெற்று மூலத்திரிகோண பலத்துடன் தனக்கு ஒளி வழங்கும் நாயகன் சூரியனுடன் அமாவாசை யோகத்தில் இணைந்துள்ளார்.

அமாவாசை யோகம் முழுமை பெற சூரிய சந்திரர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக வலுவாக இருக்க வேண்டும் என்ற விதியும் இங்கே பொருந்துகிறது.

அதோடு இந்த ஜாதகத்தின் யோகாதிபதியும் தனது நண்பரும் உச்சபலம் பெற்றிருப்பவருமான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். லக்னாதிபதி அமர்ந்த சாரநாதன் வலுப்பெறுவது வெகு சிறப்பு.

மேலும் எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்திற்கோ லக்னாதிபதிக்கோ குறைந்த பட்சம் ராசிக்கோ இயற்கைச் சுபர்களின் பார்வையோ அல்லது லக்ன சுபர்களின் பார்வையோ இருந்தே தீரும்.

அந்த வகையில் இங்கே லக்னத்தையும் லக்னாதிபதியான சந்திரனையும் இயற்கைச் சுபரும் பாக்யாதிபதியுமான குருபகவான் வலுப் பெற்றுப் பார்க்கிறார். மேலும் கடகத்தின் பூரண யோகாதிபதி செவ்வாயும் உச்சம் பெற்ற நிலையில் லக்னத்தைப் பார்த்து வலுவூட்டுகிறார்.

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பதைப் போல கடக லக்னத்தைப் பொறுத்தவரையில் குருவின் மூலத்திரிகோண ஸ்தானமான தனுசு ஆறாமிடம் ஆவதால் இந்த லக்னத்திற்கு குருபகவான் பாவி எனும் நிலைதான் பெறுவார்.

ஆனால் இந்த ஜாதகத்தில் குருபகவான் தன் ஆறாமிடத்திற்கு பனிரெண்டில் மறைந்து சுபத்துவம் பெறுவதாலும், இயற்கைச் சுபர்கள் திரிகோண ஸ்தானத்தில் மிக வலுவான நிலையை அடைவார்கள் என்பதாலும் இங்கே குருவின் பார்வை இன்னும் சுப பலம் பெற்றது.

மேலும் லக்ன பாவரும் அஷ்டமாதிபதியுமான சனியின் பார்வையும் லக்னத்திற்கு இருந்தாலும் அவர் உச்ச பங்கம் பெற்ற நிலையில் நீச நிலையை அடைந்ததால் அவர் பார்வை முற்றிலும் வலிமை இழந்தது.

மீதி யோகங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்...... 

(ஏப் 11-17, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக