சனி, 3 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -15


                                                    
சுரேசுவரருடனும் சரஸவாணியுடனும் கர்நாடகத்தில் துங்கபத்திரா கரையில் உள்ள சிருங்ககிரியை அடைந்தார்,சங்கரர்.அங்கே உடன்வந்த சரஸவாணி மணலில் ஒரு வினாடி தயங்கி நின்றுவிடவே, சங்கரர் பின்னோக்கித் திரும்பினார். பின்னர் அங்கே பீடம் அமைத்து சரஸவாணியை அங்கு பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு சிருங்ககிரி சாரதா பீடம் உதித்தது.
எதிர்காலத்துக்குத் தமது எழுத்துக்கள் இருந்தால் மட்டும் போதாது. அந்த எழுத்துக்களின் உண்மையை வழிகாட்டிகளாக இருந்து நடத்திக் காட்டும் ஞான பரம்பரைகள் என்றென்றும் இருக்க வேண்டும் என்று திருவுளம் கொண்டார் ஸ்ரீ சங்கர பகவத்பாதர். தனக்குப் பிற்பாடு எங்கெங்கோ, என்றென்றோ பிறக்கப் போகிறவர்களிடம் கூட இந்தனை கருணை. அவர்களை முன்னிட்டே நாட்டின் பல இடங்களில் மடங்களை நிருவினார். இம் மடங்கள் ஒவ்வொன்றிலும் சங்கராச்சாரியார் என்றே பெயர் கொண்ட ஆச்சார்யர்களை அமர்த்தினார். இந்த சங்கராச்சார்யர்களும் இவ்விதமே சீட பரம்பரையை உண்டாக்கி வருகின்றனர். அதனால்தான் இன்னும் சங்கர மடங்களைச் சார்ந்த சங்கராச்சார்யார்களை நாம் தரிசித்து வருகிறோம்
சிருங்ககிரியில் ஸ்ரீசங்கர பகவத் பாதர் இருந்தபோது, காலடியில் தனது அன்னையின் உயிர் ஊசலாடுவதை உணர்ந்தார். மரண காலத்தில் அவளருகே இருந்து தாமே அவளுக்கு அந்திமக்கிரியை செய்வதாக முன்பு வாக்குத் தந்திருந்தார் அன்றோ. உலகம் போற்றும் ஆசாரியார் அன்பு மகனாக மாறி அன்னையிடம் ஓடினார்.
அந்திமக்காலத்தில் அருமை மகனைக்கண்டு அகமகிழ்ந்தாள் ஆர்யாம்பாள். சங்கரர் திருமாலைக் குறித்து பாமாலை பாடினார். பெருமாளைப் போலவே நீலமேகசியாமளராக, சங்கு சக்கரம் தாங்கிய வைகுண்டலோகத் தூதர்கள் விமானத்துடன் வந்துவிட்டனர். ஆர்யாம்பாளை அவ்விமானத்தில் ஏற்றிக் கொண்டு அவர்கள் விண்ணுலகு சென்று விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக